/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பில் வீடு வீடாக மீண்டும் ஆய்வு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பில் வீடு வீடாக மீண்டும் ஆய்வு
ADDED : ஏப் 15, 2025 08:45 PM

பெங்களூரு; ''ஜாதிவாரி கணக்கெடுப்பில், வீடு வீடாக சென்று மீண்டும் ஆய்வு நடத்தும்படி, மாநில அரசிடம் நாங்கள் வலியுறுத்துவோம்,'' என காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரின் விகாஸ் சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஆய்வில் ஒக்கலிகர், லிங்காயத், முஸ்லிம், எஸ்.சி., - -எஸ்.டி., என்பது முக்கியம் இல்லை. மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகை எவ்வளவு என்பது முடிவாக வேண்டும். ஆய்வறிக்கை குறித்து, அரசு தெளிவான முடிவுக்கு வரவில்லை.
இந்த அறிக்கைக்கு பதில், வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்பது, எங்களின் கருத்தாகும். இது குறித்து முதல்வர், துணை முதல்வரிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.
மத்திய அமைச்சராக இருக்கும் குமாரசாமி, ஆய்வறிக்கையை ஏற்க முடியாது; போராட்டம் நடத்துவதாக கூறியது சரியல்ல. அவரும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும்படி, அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும். அதை விட்டு விட்டு போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. அறிக்கையை அங்கீகரிப்பதாக அரசு கூறவில்லை.
அனைத்து அமைச்சர்களுக்கும், அறிக்கையை அளித்துள்ளனர். அதில் தவறு இருந்தால், அதை அரசு சரி செய்யும். ஒக்கலிக சமுதாயத்தினர், சிவகுமாருக்கு அவ்வளவாக ஆதரவு அளிக்கவில்லை; குமாரசாமியை தான் ஆதரித்துள்ளனர். அந்த சமுதாயத்தினருக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.