/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சேமியா தயாரிக்கும் இல்லத்தரசிகள்
/
சேமியா தயாரிக்கும் இல்லத்தரசிகள்
ADDED : அக் 12, 2025 10:14 PM

பெலகாவி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் சேமியா அதிகளவு தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பில் பல பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சேமியாவிற்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம். இதற்கு அதன் சுவையே காரணம். சுவையாக இருந்தாலும், பலரும் பிராண்டட் சேமியாக்களை வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.
இதை மாற்ற, பெலகாவி ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷிண்டே ஆலோசனையில் ஈடுபட்டார். இங்கு தயாரிக்கப்படும் சேமியாவை அழகாக பாக்கெட் செய்து, ஒரு பெயரிட்டு, 'பிராண்ட்' செய்ய விரும்பினார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 'பெலகாவி சஞ்சீவினி சேமியா' என பெயரிட்டார். இந்த திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு இத்திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்து அளவில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு சிறிய அளவிலான இயந்திரங்கள் வழங்கப்பட்டன; சேமியா தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது, பெலகாவியில் 204 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள், சேமியா தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்த அசராத முன்னெடுப்பின் மூலம் 2,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால், இல்லத்தரசிகள் தங்கள் சொந்த காலில் நிற்கின்றனர். யாரிடமும் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. இங்கு தயாரிக்கப்படும் சேமியா, தாலுகா, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் அனைத்து கண்காட்சிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், சேமியாவை தயாரிக்கும் பெண்களே விற்பனை செய்யும் அரங்கிலும் பணி செய்கின்றனர். இதன் மூலம் தங்கள் வாழ்வில் அவர்கள் மேன்மை அடைகின்றனர். கிராமம் என்ற மன நிலையிலிருந்து வெளியில் வருகின்றனர். தைரியமாக செயல்படுகின்றனர்.
விமான நிலையம் முக்கியமாக இந்த சேமியா, பெலகாவி விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. இதன் மூலம், வெளிநாடு, உள்நாடு செல்வோரும் சேமியாவை ருசிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
இது குறித்து, பெலகாவி ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷிண்டே கூறியதாவது:
பெலகாவியில் தயாரிக்கப்படும் சேமியா புகழ் பெற்றது. இதை மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கினேன். இதற்காக கிடைத்த பரிசே, பெலகாவி சஞ்சீவினி சேமியா. சுத்தமான முறையில் செய்யப்படுகிறது. இதற்கு உணவுத்துறை அதிகாரிகள் சான்றிதழ் பெற்று உள்ளேன். தற்போது, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்கின்றனர். இது, மேலும் விரிவுபடுத்தப்படும். வரும் காலங்களில் வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாநில, மத்திய அரசுகள் உறுதுணையாக உள்ளன. அரசின் மானியத்தின் மூலமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -