உத்தரகண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து கர்நாடகாவின் 5 பேர் பலியானது எப்படி?
உத்தரகண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து கர்நாடகாவின் 5 பேர் பலியானது எப்படி?
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:54 PM

– நமது நிருபர் –
உத்தரகண்டின் ஜோஷித்மத் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், பெங்களூரு சி.சி.பி., இன்ஸ்பெக்டர் உட்பட கர்நாடகாவின் 5 பேர் பலியானது குறித்து சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், பத்ரிநாத் ஹெலிபேடில் இருந்து நேற்று மதியம் 1:12 மணிக்கு டேராடூன் நோக்கி, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த விமானத்தில் பைலட்டும், ஐந்து பயணியரும் இறந்தனர்.
புறப்பட்ட இரண்டே நிமிடத்தில் அதாவது 1:14 மணிக்கு ஜோஷிமத் பள்ளத்தாக்கு பகுதியில், ஹெலிகாப்டர் சென்ற போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுமையாக இழந்தது.
இன்னொரு ஹெலிகாப்டரில் சென்று பார்த்த போது, தொடர்பை இழந்த ஹெலிகாப்டர், சாய் கிராமத்தின் ஹாதி பர்வத் மலைப்பகுதியில், விபத்தில் சிக்கி நொறுங்கி கிடப்பது கண்டறியப்பட்டது. தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பேரும் இறந்தது உறுதிப் படுத்தப்பட்டது.
கல்வி நிறுவன தலைவர்
இறந்தவர்கள் விமானத்தின் பைலட்டான டில்லியின் ஹுமான்ஷு, 48, கர்நாடகாவை சேர்ந்த அருண் சலுங்கே, 44, சுதிர், 50, சங்கர் கவுடா, 39, நடராஜ், 51, பிரதாப் கவுடா, 41 என்பது தெரிந்தது.
இவர்களில் அருண் சலுங்கே பெங்களூரு சி.சி.பி.,யில் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆவார். சுதிர், சங்கர் கவுடா வக்கீல்கள் ஆவர். நடராஜ் துமகூரில் உள்ள வித்யா பாரதி கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பிரதாப் கவுடா தொழில் அதிபர்.
கடந்த 2007ம் ஆண்டு போலீஸ் துறைக்கு தேர்வான அருண் சலுங்கே, கர்நாடக பிரிவு அதிகாரியாக டில்லியில் உளவு துறையில் பணியாற்றினார். பின், பெங் களூரு ரூரல் நெலமங்களா, துமகூரின் குனிகல், பெங்களூரு நகரின் பானஸ்வாடி, இந்திராநகர் போலீஸ் நிலை யங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
மோசமான வானிலை
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான், சி.சி.பி.,யின் சைபர் கிரைம் பிரிவுக்கு இன்ஸ்பெக்டராக வந்தார். குனிகல்லில் பணியாற்றிய போது நடராஜ், சங்கர் கவுடாவுடன் அவருக்கு நட்பு இருந்தது.
பெங்களூரில் பணியாற்றிய போது பிரதாப் கவுடா, வக்கீல் சுதிருடன் அறி முகம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். அருண் உட்பட 5 பேரும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு, கடந்த 27ம் தேதி சுற்றுலா சென்றனர்.
பத்ரிநாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நினைத்தனர். ஆனால் மோசமான வானிலையால் இரண்டு நாட்கள் காத்திருந்து, நேற்று தான் அவர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிந்துள்ளது.
அரசு உதவி
அருண் சலுங்கே உட்பட கர்நாடகாவின் 5 பேர் மறைவுக்கு, அரசு தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் ஹொன்னம்பா வெளியிட்ட அறிக்கையில், ‘உத்தரகண்ட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஐந்து கன்னடர்கள் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஜோஷிமத் கொண்டு செல்லப் படுகின்றன.
‘இறந்தவர்கள் உடல்களை விரைவாக கர்நாடகாவுக்கு கொண்டு வர, முதல்வர் அலுவலகம், டில்லியில் உள்ள கர்நாடக பவன் அதிகாரிகள், உத்தரகண்ட் அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்’ என கூறப் பட்டுள்ளது.
