வீட்டில் சோலார் அருங்காட்சியகம் அமைத்த ஹூப்பள்ளி விஞ்ஞானி
வீட்டில் சோலார் அருங்காட்சியகம் அமைத்த ஹூப்பள்ளி விஞ்ஞானி
ADDED : ஏப் 19, 2026 02:44 AM

மேற்காசியாவில் நிலவும் போர், ஒட்டு மொத்த உலகிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எரிபொருளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அதன் விலையும் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், ஹூப்பள்ளியை சேர்ந்த ஒருவர், தனக்கு எரிவாயு சிலிண்டரும் வேண்டாம், மின்சாரமும் வேண்டாம் என்று தெரிவிக்கிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் மகேஷ் சிவசிம்பிகர், 60. சூரிய ஆற்றல் விஞ்ஞானியாக பல இடங்களில் பணியாற்றியவர்; தற்போது தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில் வசித்து வருகிறார்.
30 ஆண்டுகள் இவர், 30 ஆண்டுகளாக சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சார உற்பத்தியில் முழுமையான தன்னிறைவை அடைந்து உள்ளார். மக்களிடம் சூரியஒளியின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, 2006 பிப்ரவரியில், 'சன் ரே சோலார் மியூசியம்'மை, தன் வீட்டின் ஒரு பகுதியில் துவக்கினார்.
உலகில் சோலார் அருங்காட்சியகம் துவங்கப்பட்டது, இவரது வீட்டில் தான். இதுகுறித்து மத்திய அரசின் கலாசார துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் வாரியத்தின், 'இந்திய அறிவியல் அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்களின் கையேடு' என்ற நுாலில், கட்டுரை வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சூரியஒளியை மட்டுமே பயன்படுத்தி வெயிலிலும் - குளிரிலும் காற்றை வழங்கும் சூரிய தொப்பி, கைபேசியுடன் கூடிய எல்.இ.டி., சலவை இயந்திரம், விவசாய விளை பொருட்களை உலர்த்தும் இயந்திரம், தெருவிளக்கு, நீர்நிலைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் காற்றுாட்டி, சூரிய இன்வெர்ட்டர், சூரிய ஒளியில் மாட்டு கோமியத்தை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம், சாண எரிவாயு அடுப்பு, சாண எரிவாயு விளக்கு, சூரிய சக்தி இஸ்திரி பெட்டி, சூரிய வேலி என, பலவற்றை கண்டுபிடித்து உள்ளேன்.
சூரிய ஒளி அடுப்பு சூரிய ஒளியை பயன்படுத்தி, உணவு தயாரிக்கும் அடுப்பை கண்டுபிடித்து உள்ளேன். வீட்டின் கூரையில் சூரிய ஒளி பேனல்களை பொருத்துவதற்காக ஒரு கருவி தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் நடுவில், ஒரு அடுப்பை வைத்தால், அந்த கருவியின் மீது விழும் சூரிய கதிர்களால், 5 - 10 நிமிடங்களில் உணவு தயாராகி விடும். ஆனாலும், இதனை வீட்டிற்குள் வைத்து சமைக்க முடியாது. வீட்டிற்குள் வைக்கும் சமையல் செய்யும் அடுப்பை, இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்துவேன்.
மக்களுக்கு சில சூரிய சக்தி சாதனங்களை பற்றி தெரியும். சூரிய ஆற்றலை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதற்காக, இந்த அருங்காட்சியகத்தை நிறுவி உள்ளேன். அனைத்து சாதனங்களையும் சூரிய ஒளியில் இயக்க முடியும் என்று இங்கு விளக்கப்பட்டு உள்ளது.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. மேலும், எரி பொருட்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இதற்கு மாற்றாக, அளவற்ற சூரிய ஆற்றலை நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால், இன்றைய எரி சக்தி பிரச்னையை தீர்க்க முடியும். இதனால், பெட்ரோல், டீசல், நிலக்கரிக்காக, மாற்ற நாடுகளை சார்ந்திருக்காமல், நம் பணத்தை சேமிக்க முடியும்.
புராஜெக்ட் இந்த அருங்காட்சியகத்தை, பள்ளி மாணவர்கள் முதல் பொறியியல் மாணவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். எம்.டெக்., - பி.எச்.டி., பட்டதாரிகளுக்கு 'புராஜெக்ட்'கள் கற்பிக்கப்படுகின்றன. பெங்களூரு, மைசூரு உட்பட பல கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், இங்கு வந்து புராஜெக்ட் செய்து, தங்களுக்கான வேலையை பெற்றுக் கொள்கின்றனர். ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
அகில இந்திய அருங்காட்சியகங்களின் பட்டியலில், எங்களின் அருங்காட்சியகம் பெயர் இடம் பெற்றுள்ளது. ஹாவேரி மாவட்டம் ஷிகான் தாலுகாவின் ஹொன்னாபூரில் ஒன்றரை ஏக்கரில் புதிய அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. சூரிய ஆற்றலின் வரலாறு குறித்து சேகரிப்பு, சூரிய தொழில்நுட்ப கண்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 'நிகர்நிலை பல்கலைக்கழகம்' நிறுவுவதும், பயிலரங்கம் ஏற்பாடு செய்வதே இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரது மகன் மதுர், எம்.எஸ்., எம்.டெக்., முடித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான போதும், தந்தையின் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளார்.
மேலும் விபரங்களுக்கு, 98442 01703 மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -:
