/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை திட்டிய கணவர் வன்கொடுமை வழக்கில் கைது
/
மனைவியை திட்டிய கணவர் வன்கொடுமை வழக்கில் கைது
ADDED : ஜன 14, 2026 03:37 AM

பெங்களூரு: ஜாதியின் பெயரை சொல்லி மனைவியை திட்டிய கணவரான ஐ.டி., ஊழியர், தனது காதலியுடன் பி.ஜி.,யில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெட்ரேலா ஜேக்கப் அருப், 32. இவர் தனது மனைவியுடன் பெங்களூரு ஹெப்பாலில் வசித்தார். ஜெட்லேரா தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும்; மனைவி இன்னொரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவும் பணியாற்றினர்.
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், ஜெட்ரேலாவின் வேலை பறிபோனது. வேலையின்றி வீட்டில் இருந்தார். இதையடுத்து அவரது மனைவி, தான் செய்த பணியை, கணவருக்கு வாங்கி கொடுத்து விட்டு, தன் வேலையை ராஜினாமா செய்தார்.
குழந்தையும் பிறந்ததால் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றார். ஜெட்ரேலா மட்டும் தனியாக வசித்தார். அடிக்கடி ஊருக்கு சென்று வந்தார். இதற்கிடையில், மனைவி 2வதாக கர்ப்பமானார். அதற்கு பின், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. வயிற்றில் வளரும் கருவை கலைக்கும்படி துன்புறுத்தியதுடன், ஜாதியை கூறியும் மனைவியை ஜெட்ரேலா துன்புறுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜெட்ரேலாவுக்கு, தன்னுடன் பணி செய்யும் இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பி.ஜி.,யில் ஒன்றாக வசித்தனர். இதுபற்றி அறிந்த மனைவி, ஆந்திராவில் இருந்து பெங்களூரு வந்தார். மேற்கு மண்டல மனித உரிமைகள் சிவில் இயக்குநரக போலீசில், கணவர் மீது புகார் செய்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெட்ரேலா மீது வழக்கு பதிவானது.
நேற்று காலை அவர் தங்கி இருந்த பி.ஜி.,க்கு போலீசார் சென்றனர். அவரும், கள்ளக்காதலியும் ஒரே படுக்கையில் துாங்கி கொண்டு இருந்தனர். ஜெட்ரேலாவை எழுப்பி அவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலியையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

