ADDED : ஏப் 06, 2026 04:35 AM

மைசூரு: குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்று, உடலை துாக்கில் தொங்கவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஹாசன் மாவட்டம், அரகலகூடு கேரளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45. இவர் 12 ஆண்டுக்கு முன் உறவினர் மகளான ஸ்ருதி, 30 என்பவரை திருமணம் செய்தார். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மைசூரின் சரகூர் தாலுகா பிடரஹள்ளி கிராமத்தில் தம்பதி, பிள்ளைகளுடன் வசித்தனர். பேக்கரி நடத்தினர்.
சில மாதங்களான கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தும் சமரசம் ஏற்படவில்லை.
கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தகராறில் ஸ்ருதியை, ஜெகதீஷ் சரமாரியாக தாக்கினார். மயங்கி விழுந்த ஸ்ருதி இறந்தார். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க நினைத்த கணவர், மனைவி கழுத்தில் சேலையை மாட்டி துாக்கில் தொங்கவிட்டார். துாக்கிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்ருதியின் முகம், மூக்கில் காயம் இருந்தது தெரியவந்தது.
நேற்று முன்தினம் ஜெகதீஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். மனைவியை கொன்றதை ஒப்பு கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
