ADDED : மே 16, 2025 10:18 PM

பானஸ்வாடி: முதல் மனைவிக்கு பிறந்த, தன் மகள்களை பார்க்க சென்ற விஷயத்தில் தகராறு செய்த இரண்டாவது மனைவியை கொன்ற கார்பென்டர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பானஸ்வாடியின், பச்சப்பா லே - அவுட்டில் மூன்றாவது கிராசில் வசிப்பவர் ரமேஷ், 45. கார்பென்டர். இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக இருந்த தறுவாயில், 11 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது மனைவி இறந்துவிட்டார்.
அடுத்த ஆண்டு, ரமேஷுக்கு, கலைவாணி, 38, என்பவர் அறிமுகமானார். திருமணமாகி, கணவரை இழந்தவர். குழந்தை இல்லை. இருவரும் கலந்து பேசி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ரமேஷின் மகள்கள் தனியாக வசித்து வருகின்றனர்.
கலைவாணிக்கும், ரமேஷுக்கும் 9 வயதில் மகன் உள்ளார். ரமேஷ் அவ்வப்போது தன் மகள்களை பார்க்கச் செல்வார்.
இது கலைவாணிக்கு பிடிக்கவில்லை. முதல் மனைவியின் மகள்களை பார்க்க செல்லக் கூடாது என்று கூறி தகராறு செய்வார். இதே காரணத்தால் தம்பதிக்கிடையே, அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது.
நேற்று முன் தினமும், தன் மகள்களை பார்க்க ரமேஷ் சென்றார். இதையறிந்த கலைவாணி, கணவரை திட்டி சண்டை போட்டார். அது மட்டுமின்றி, முதல் மனைவியின் மகள்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். நள்ளிரவு வரை சண்டை தொடர்ந்தது. அதன்பின் உறங்க சென்றனர்.
தன் மகள்களை தகாத வார்த்தைகளால் திட்டியதை, ரமேஷால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதே கோபத்தில் இருந்த அவர், நேற்று அதிகாலை மனைவி கலைவாணியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். அதன்பின் பானஸ்வாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
போலீசாரும் அவரை கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்துள்ளனர்.