/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
/
காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
ADDED : மே 07, 2025 11:10 PM
பெங்களூரு: பெங்களூரின் வாபசந்திராவில் வசிப்பவர் சோஹன் குமார், 25. இவர், ஒடிஷாவை சேர்ந்த பிரியதர்ஷினி, 21, என்ற பெண்ணை காதலித்தார். இவர்களின் காதலுக்கு, இருவரின் குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருவரையும் பிரிக்கவும் முயற்சித்தனர்.
எனவே காதலர்கள், தமிழகத்துக்குச் சென்று, திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின், பெங்களூருக்கு திரும்பினர்.
பிரியதர்ஷினியை சோஹன் குமாரின் குடும்பத்தினர், மருமகளாகவே ஏற்கவில்லை. எனவே கணவரை அழைத்துக் கொண்டு சொந்த மாநிலமான ஒடிஷாவுக்கு சென்றார். அங்கு குடும்பம் நடத்தத் துவங்கினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரியதர்ஷினி கருவுற்றார். அந்த நிலையில் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு. சோஹன்குமார் மட்டும் பெங்களூரு திரும்பிவிட்டார். அதன்பின் மனைவியை பார்க்க செல்லவில்லை. குழந்தையை பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை.
வெறுப்படைந்த பிரியதர்ஷினியின் பெற்றோர், 'இனி சோஹன் குமாரை நினைக்க வேண்டாம். அவரை விவாகரத்து செய்துவிட்டு, வேறு திருமணம் செய்து கொள்' என, மகளுக்கு புத்திமதி கூறினர்.
பெற்றோரின் பேச்சை கேட்காத பிரியதர்ஷினி, கணவரை காண சமீபத்தில் பெங்களூருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஏதோ காரணத்தால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபமடைந்த சோஹன், பிரியதர்ஷினி கழுத்தை நெரித்து கொலை செய்தார். சோஹனை போலீசார் கைது செய்தனர்.

