ADDED : ஜூன் 20, 2025 11:10 PM

உடுப்பி: அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தியதால், மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பிரம்மாவரா தாலுகாவின், ஹிலியானா கிராமத்தின், ஹொசமடா என்ற இடத்தில் வசிப்பவர் கணேஷ் பூஜாரி, 39. இவரது மனைவி ரேகா, 34. மொபைல் போனுக்கு ரேகா அடிமை.
இதனால் எரிச்சல் அடைந்த கணேஷ், அதிகம் மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என, பல முறை அறிவுறுத்தினார். ஆனால் ரேகா பொருட்படுத்தவில்லை. இதே காரணத்தால் தம்பதிக்கு தினமும் வாக்குவாதம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, கணேஷ் பூஜாரி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போதும் மனைவி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கண்டு கோபமடைந்த கணவர், மனைவியை திட்டினார்.
ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி, கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ரேகா கொலையானது தெரிய வந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சங்கர நாராயணா போலீசார், கணேஷ் பூஜாரியை கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி., ஹரிராம், சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.