ADDED : ஜூலை 08, 2026 11:15 PM

தார்வாட்: மனைவியை இரு சக்கர வாகன ஹெல்மெட்டால் அடித்து கொன்ற கணவரை போலீசார் தேடுகின்றனர்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் கணேஷ்நகரை சேர்ந்த சிவராஜ் ஹலேமானி, 28, என்பவருக்கும், நாகரத்னா, 19, என்பவருக்கும், நான்கரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நாகரத்னா, கோபித்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். சில நாட்களுக்கு பின், மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்து விடுவது அவருக்கு வழக்கம்.
வழக்கம் போல, சில நாட்களுக்கு முன் கணவரிடம் கோபித்து, தாய் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, நேற்று காலை மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கோபம் அடைந்த சிவராஜ், தன் இரு சக்கர வாகன ஹெல்மெட்டால், நாகரத்னாவின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சிவராஜ், அங்கிருந்து தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த போலீசார், தலைமறைவாக உள்ள சிவராஜை தேடி வருகின்றனர்.
