/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவர் கள்ளத்தொடர்பு மனைவி தற்கொலை
/
கணவர் கள்ளத்தொடர்பு மனைவி தற்கொலை
ADDED : செப் 01, 2025 10:10 PM
பாகல்குன்டே : கணவரின் தவறான நடத்தையால், மனம் நொந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, பாகல்குன்டேவின் சிடேதஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பூஜாஸ்ரீ, 28. இவர் மூன்று ஆண்டுக்கு முன்பு, பெற்றோர் பார்த்து முடிவு செய்த நந்தீஷ், 32, என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நந்தீஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பூஜாஸ்ரீ தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றினார். நந்தீஷ் கடந்த ஓராண்டாக, வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். சமீபத்தில் இவ்விஷயம் மனைவிக்கு தெரிந்தது. இது குறித்து, கணவரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் மனைவியை நந்தீஷ் தாக்கி கொடுமைப்படுத்தினார்.
மற்றொரு பக்கம், வரதட்சணை வாங்கி வரும்படி, அவரை நந்தீஷின் தாய் துன்புறுத்தினார். இதனால் பூஜாஸ்ரீ, தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பின் சமாதானம் செய்து, மனைவியை வீட்டுக்கு கணவர் அழைத்து வந்தார். ஆனால் மூன்று நாட்களுக்கு முன், மனைவியுடன் நந்தீஷ் சண்டை போட்டு அடித்ததால், மீண்டும் தன் தாய் வீட்டுக்கு பூஜா சென்றார். அவரை மீண்டும் சமாதானம் செய்து, நந்தீஷ் அழைத்து வந்தார்.
கணவரின் இத்தகைய செயலால் மனம் வருந்திய பூஜாஸ்ரீ, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, நந்தீஷை போலீசார், நேற்று கைது செய்தனர்.