ADDED : ஜூன் 20, 2026 10:57 PM
தட்சிண கன்னடா: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்த கணவர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம், கடபா தாலுகாவின், கஜே கிராமத்தில் வசித்தவர் தினேஷ், 28. இவரது மனைவி சங்கீதா, 25. இந்த தம்பதிக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
அலங்காரு பேட்டில் தினேஷ் ஹோட்டல் நடத்தி வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடக்கும். இதனால் மனம் வெறுத்த தினேஷ், ஒரு மாதத்துக்கு முன், மனைவி, மகளை விட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தான், தினேஷ் வீடு திரும்பினார். இரவு தம்பதிக்கிடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த கணவர், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இவர்களின் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர், உள்ளே சென்று பார்த்த போது, தம்பதி இறந்து கிடந்ததும், குழந்தை அழுதபடி இருந்ததும் தெரிந்தது.
இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கடபா போலீசார், உடல்களை மீட்டு, விசாரணையை துவக்கியுள்ளனர்.
