/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை
ADDED : ஜூன் 28, 2025 11:07 PM

கொப்பால்: மூன்றாவது மனைவியை கொன்ற வழக்கில் மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட முதியவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின், ஹாலதாளா கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்த ஹுசேனப்பா, 75. இவர் பாதர்லியின் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், உதவி அதிகாரியாக பணியாற்றினார். இவரது மூன்றாவது மனைவி ரேணுகா.
கங்காவதியின் லட்சுமி கேம்பில் மனைவியுடன் வசித்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை ஹனுமந்த ஹுசேனப்பா துன்புறுத்தினார். இதே காரணத்தால், 2002ல் ரேணுகாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி, கங்காவதி பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார். பல்லாரியின் கம்ப்ளிக்கு செல்லும் அரசு பஸ்சில் லக்கேஜ் என கூறி, ஏற்றி வைத்தார். கீழே இறங்கிச் சென்றவர் வரவில்லை. சந்தேகமடைந்து நடத்துநர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பார்த்தபோது, சாக்கு மூட்டையில் பெண் சடலம் இருப்பது தெரிந்தது. விசாரணை நடத்தி கொலையானது ரேணுகா என்பதையும், அவரது கணவரே கொலையாளி என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
தலைமறைவான ஹனுமந்த ஹுசேனப்பாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர், ஊராக நாடோடியாக திரிந்த அவர், 23 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊரான ஹாலதாளாவுக்கு வந்தார். அவரை கங்காவதி போலீசார், மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
கங்காவதி முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஹனுமந்த ஹுசேனப்பாவை ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் மாலை, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.