/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொன்று தப்பிய கணவர் புனேயில் தற்கொலை முயற்சி
/
மனைவியை கொன்று தப்பிய கணவர் புனேயில் தற்கொலை முயற்சி
மனைவியை கொன்று தப்பிய கணவர் புனேயில் தற்கொலை முயற்சி
மனைவியை கொன்று தப்பிய கணவர் புனேயில் தற்கொலை முயற்சி
ADDED : மார் 29, 2025 05:27 AM

ஹுலிமாவு : மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கேல்தார், 36. இவர், பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கவுரி அனில் சாம்பேகர் 32. ஹுலிமாவின் தொட்டகம்மனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதி வசித்தனர்.
தப்பி ஓட்டம்
கடந்த 26ம் தேதி இரவு, தம்பதி இடையே சண்டை நடந்தது. கோபமடைந்த கணவர், கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்தார். உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேசில் நிரப்பினார். சூட்கேசை குளியலறையில் வைத்தார். பின், தன் காரில் மஹாராஷ்டிராவுக்கு தப்பிச் சென்றார்.
மஹாராஷ்டிராவில் உள்ள, மாமியார் வீட்டினரை தொடர்பு கொண்டு, 'உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார்' என, கூறியுள்ளார். தன் வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் வாடகைதாரரருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் போன் செய்து, 'என் மனைவி தற்கொலை செய்து கொண்டார், சென்று பாருங்கள்' என, கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, மீண்டும் போன் செய்து, “என் மனைவியை நான் தான் கொலை செய்தேன்,” என, கூறியுள்ளார். வீட்டு உரிமையாளர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் கவுரியின் பெற்றோர், மஹாராஷ்டிரா போலீசார் வாயிலாக கொடுத்த தகவலும் பெங்களூரு போலீசாருக்கு வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்று, சூட்கேசில் இருந்த உடலை கண்டுபிடித்தனர். அதை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலையாளியை தேடியபோது, அவர் மஹாராஷ்டிராவின் புனேவுக்கு சென்றது தெரிய வந்தது. அங்கு போலீசார் விரைந்தனர்.
இதுகுறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
ஒரு மாதத்துக்கு முன்பு தான், கவுரியுடன் ராகேஷ் பெங்களூரு வந்தார். தொட்டகம்மனஹள்ளியின் அமுதா அபார்ட்மென்டில் தம்பதி வசித்தனர்.
தனியார் நிறுவனம்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ராகேஷ், வீட்டில் இருந்தே பணியாற்றினார். கவுரி, பெங்களூரு வருவதற்கு முன்பு, மஹாராஷ்டிராவில் வேலை செய்துள்ளார். வேலையை விட்டு, பெங்களூரு வந்துள்ளார்.
இங்கு அவருக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை. விரக்தியடைந்த கவுரி, கணவர் மீது கோபத்தை காட்டினார். சொந்த ஊரான மஹாராஷ்டிராவுக்கே சென்றுவிடலாம் என, பிடிவாதம் பிடித்தார்.
கடந்த 26ம் தேதி இரவு தம்பதிக்கு இடையே சண்டை நடந்தது. கோபமடைந்த கவுரி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, ராகேஷ் மீது வீசினார். இதில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர், அதே கத்தியால், மனைவியின் கழுத்தில் பல முறை குத்தினார்; இதில் அவர் இறந்தார்.
பின் சடலம் அருகே அமர்ந்து அழுது புலம்பியுள்ளார். மறுநாள் அதிகாலை மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, டிராலி சூட்கேசில் வைத்து, குளியலறையில் வைத்துள்ளார். காரில் மஹாராஷ்டிராவுக்கு சென்றுள்ளார்.
ராகேஷை தேடி ஹூலிமாவு போலீசார், மஹாராஷ்டிரா சென்றனர். புனேவுக்கு சென்ற ராகேஷ், அங்கு பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது தெரிந்தது.
அவரிடம் விசாரித்ததில் கொலைக்கான காரணம் தெரிய வந்தது. சிகிச்சை முடிந்த பின், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெங்களூருக்கு ராகேஷை அழைத்து வருவர். கவுரியின் குடும்பத்தினர் பெங்களூரு வந்துள்ளனர். அவர்களிடமும் தகவல் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.