ADDED : ஏப் 04, 2026 04:41 AM

- நமது நிருபர் -
ஹைதராபாத் என்றாலே, பிரியாணிக்கு புகழ்பெற்றது. நாட்டின் சமையல் பாரம்பரியத்தில் தனி இடத்தையும் பிடித்து உள்ளது. அங்கு பிரியாணி மட்டுமல்ல. முட்டை மலாய் குருமாவுக்கும், அதிக டிமாண்ட் உள்ளது. நாவில் எச்சில் ஊற வைக்கும், முட்டை மலாய் குருமாவை உங்கள் வீட்டிலும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைத்த முட்டை ஆறு
எண்ணெய் முக்கால் டீஸ்பூன்
சீரகம் கால் டீஸ்பூன்
ஆறு பச்சை மிளகாய்
இரண்டு நறுக்கிய வெங்காயம்
கொத்தமல்லி கால் கப்
புதினா கால் கப்
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
தயிர் இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் துாள் அரை டீஸ்பூன்
மல்லி துாள் ஒரு டீஸ்பூன்
சீரக பவுடர் கால் டீஸ்பூன்
பத்து முந்திரி
பால் அரை கப்
சுடுதண்ணீர் முக்கால் கப்
கரம் மசாலா பவுடர் கால் டீஸ்பூன்
மிளகு துாள் கால் டீஸ்பூன்
ஹெவி கிரிம் இரண்டு டீஸ்பூன்
வெண்ணெய் ஒரு டீஸ்பூன்
செய்முறை
மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
சிறிது உப்பு சேர்த்து தட்டு வைத்து, 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பத்து நிமிடத்திற்கு பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தயிரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின், மஞ்சள், மல்லி துாள், சீரகப்பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். பின், சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, பால், சுடுதண்ணீர் ஊற்றி நன்கு கிளறி இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பின், கரம் மசாலா பவுடர், மிளகு துாள், கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.
வேக வைத்த முட்டையை நறுக்கி போட்டு, இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விடுங்கள். இறுதியில், ஹெவி கிரிம், நறுக்கிய கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கினால், சுவையான ஹைதராபாத் முட்டை மலாய் குருமா ரெடி. சப்பாத்தி, நாண், புலாவ், இடியாப்பத்திற்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.
