'எனக்கு 57; உனக்கு 27 சம்திங்... சம்திங்...' ஆசிரியை கொலையில் கள்ளக்காதலன் கைது
'எனக்கு 57; உனக்கு 27 சம்திங்... சம்திங்...' ஆசிரியை கொலையில் கள்ளக்காதலன் கைது
ADDED : ஏப் 09, 2026 02:14 AM

கலபுரகி: கலபுரகியில் 57 வயது ஆசிரியையை கொன்று, உடலை நடுரோட்டில் எரித்த 27 வயது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கலபுரகி மாவட்டம் கமலாபூர் தாலுகா கலமுடா கிராமத்தில் கடந்த 4 ம் தேதி, பாதி எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கலபுரகி டவுன் ஆனந்த் நகரை சேர்ந்த ஜோதி கபாலே, 57 என்பதும், பீதர் மாவட்டம் பால்கி தாலுகா வஞ்சர்கடா கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்ததும் தெரிந்தது. இவரை கொன்றது யார், என்ன காரணம் என்று விசாரணை நடந்தது.
ஜோதி பயன்படுத்திய மொபைலின் நம்பர் மூலம், அவர் யார், யாரிடம் பேசினார் என்று சரிபார்த்த போது, ஆனந்த் நகரில் வசிக்கும் அமர் குட்டஹள்ளி, 27 என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது.
இதனால் நேற்று முன்தினம் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
ஜோதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றதுடன், வழக்கில் இருந்து தப்பிக்க உடலை எரித்ததை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.
தார் 'ஜீப்' பரிசு அதாவது ஜோதிக்கு திருமணம் ஆகவில்லை. ஆனந்த் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு, விடுமுறை நாட்களில் வந்த போது அமருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மனைவி, இரு குழந்தைகள் இருந்த போதும், தன்னை விட 30 வயது பெரியவரான ஜோதியுடன், அமர் கள்ளக்காதலில் இருந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
ஜோதியிடம் நிறைய பணம் இருப்பதை அறிந்த அமர், தனக்கு தேவைப்படும் போது எல்லாம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார். அமருக்கு, ஜோதி 'தார்' ஜீப் பரிசாக வாங்கி கொடுத்து இருந்தார்.
மானம் போயிடும் இந்நிலையில் ஜோதிக்கு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பணத்தை திரும்ப தரும்படி அமரிடம் கேட்டு உள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. பணத்தை தராவிட்டால் நமது கள்ளக்காதல் பற்றி வெளியே சொல்லி விடுவேன் என்றும் ஜோதி கூறி உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்று நினைத்த அமர், ஜோதியை கொல்ல முடிவு எடுத்தார்.
கடந்த 3ம் தேதி காலையில் இருந்து ஜீப்பில் இருவரும் பல இடங்களுக்கு சென்றனர். இரவில் கலமுடா கிராமத்திற்கு வந்தனர்.
ஜீப்பில் இருந்து இறங்கி சாலையில் நின்று பேசினர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதி கழுத்தை அறுத்து அமர் கொலை செய்தார்.
போலீசில் இருந்து தப்பிக்க ஏற்கனவே கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை, ஜோதி உடல் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
