/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., நிகழ்ச்சிக்கு கவர்னரை அழைத்தது நான் தான்: சித்தராமையா
/
ஆர்.சி.பி., நிகழ்ச்சிக்கு கவர்னரை அழைத்தது நான் தான்: சித்தராமையா
ஆர்.சி.பி., நிகழ்ச்சிக்கு கவர்னரை அழைத்தது நான் தான்: சித்தராமையா
ஆர்.சி.பி., நிகழ்ச்சிக்கு கவர்னரை அழைத்தது நான் தான்: சித்தராமையா
ADDED : ஜூன் 11, 2025 11:44 PM

சிக்கபல்லாபூர்: ''விதான் சவுதா படிக்கட்டில் நடந்த, ஆர்.சி.பி., அணி பாராட்டு நிகழ்ச்சிக்கு கவர்னரை அழைத்தது நான் தான்,'' என்று, முதல்வர் சித்தராமையா உண்மையை ஒப்பு கொண்டார்.
சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விதான் சவுதா படிக்கட்டில் நடந்த, ஆர்.சி.பி., அணி பாராட்டு நிகழ்ச்சிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை யாரும் அழைக்கவில்லை. அவராக தான் வந்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறு. கடந்த 4ம் தேதி கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனை சேர்ந்த சங்கர், ஜெயராம் என்னை சந்தித்து, ஆர்.சி.பி., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
நான் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட போது, எனது அரசியல் செயலராக இருந்த கோவிந்தராஜ், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மொபைல் போனில் பேசினார். என்னிடம் மொபைல் போனை கொடுத்தார். விதான் சவுதா படிக்கட்டில் நடக்கும் ஆர்.சி.பி., அணி பாராட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். நீங்களும் வாருங்கள் என்று கவர்னரை அழைத்தேன். அதன்படி அவர் அங்கு வந்தார். எனக்கு முன்பு கவர்னரை யாராவது அழைத்தனரா என்று, என்னிடம் தகவல் இல்லை.
நிகழ்ச்சி துவங்கியதும் மழை பெய்ததால் 20 நிமிடத்தில் முடிந்தது. கவர்னர் புறப்பட்டு சென்றார். நானும் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த விஷயத்தில் பொய் தகவலை பரப்ப வேண்டாம் என்பதால், அன்று என்ன நடந்தது என்று தெளிவுபடுத்துகிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பத்திற்கு, அரசு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளது.
கன்னட மேம்பாட்டு ஆணையத்திற்கு நிதி தேவைப்பட்டால் ஒதுக்க தயார். பெலகாவி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இதுதொடர்பாக பெலகாவி, சிக்கோடி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துவேன். வரும் 19ம் தேதி நந்தி மலையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.