சொந்த செலவில் பங்கேற்கிறேன் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கடிதம்
சொந்த செலவில் பங்கேற்கிறேன் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கடிதம்
UPDATED : நவ 19, 2026 12:08 AM
ADDED : நவ 18, 2026 08:30 PM

பெங்களூரு: 'பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் எனக்கு தங்குமிடம், உணவு, இதர வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டாம். நானே சொந்தமாக செலவு செய்கிறேன்' என, சபாநாயகருக்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் கடிதம் எழுதியுள்ளார்.
யாத்கிர் மாவட்டம் குருமிட்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலுக்கு எழுதிய கடிதம்:
கர்நாடகாவின் வடமாவட்டங்கள், கல்யாண கர்நாடகாவில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும், பிராந்திய சமநிலையை பேணவும் தான் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
ஆனால் கூட்டத்தொடர் வெறும் பெயரளவுக்கு மட்டுமே இல்லை. பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படுவது இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தப்படும் கூட்டத்தொடரால் ஒரு பலன் கூட இல்லை. மக்கள் வரி பணத்தை அரசு வீணடிக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களுக்கு தேவையானதை செய்கிறோம் என்று மக்கள் நம்பிக்கையை பெற்று எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன். ஆனால், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், எம்.எல்.ஏ.,வாக இருந்து என்ன பயன் என்ற ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 2 ல் பெலகாவியில் துவங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு அரசு சார்பில் தங்குமிடம், உணவு, இதர சலுகைகள் வேண்டாம். எனது சொந்த செலவில் கூட்டத்தொடருக்கு வந்து செல்கிறேன். இதற்கு அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
