கடல் தாமரை புத்தக பூங்காவை பிரபலமாக்குவேன் 'எம்.ஜி.ஆர்., பக்தர்' முகமது ஜப்பார் நெகிழ்ச்சி
கடல் தாமரை புத்தக பூங்காவை பிரபலமாக்குவேன் 'எம்.ஜி.ஆர்., பக்தர்' முகமது ஜப்பார் நெகிழ்ச்சி
ADDED : ஏப் 14, 2026 06:02 AM

பெங்களூரு: ''இரட்டை இலை சின்னத்தை பிரபலப்படுத்தியது போல, கடல் தாமரை புத்தக பூங்காவையும் பிரபலப்படுத்துவேன்,'' என, எம்.ஜி.ஆர்., பக்தர் அப்துல் ஜப்பார் கூறினார்.
பெங்களூரு குயின்ஸ் ரோடு 'தினமலர்' அலுவலகத்தில் இயங்கி வரும், கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு நகரின் பல இடங்களில் இருந்தும், வாசகர்கள் பல மணி நேரம் பயணித்து வருகின்றனர். 'புத்தர் தவமிருந்த போதி மரம் போல, வாசகர்கள் தவமிருக்கும் ஞான மரமாக கடல் தாமரை புத்தக பூங்கா' மாறியுள்ளது.
எட்டாவது வள்ளல் ஜெயநகர் 1வது பிளாக்கில் வசிக்கும், 71 வயதான ஜப்பார் நேற்று வந்தார். அவர் வந்தவுடன், 'தலைவர் புத்தகங்கள் எங்கே' என்று கேட்டார். குவியலாக இருந்த எம்.ஜி.ஆர்., புத்தகங்களில், 'எட்டாவது வள்ளல்' என்ற புத்தகத்தை எடுத்து தீயாக படிக்கத் துவங்கினார். 'இந்த புத்தகத்தை எனக்கு விலைக்கு தாருங்கள். எவ்வளவு ரூபாய்' என்று ஆர்வமுடன் கேட்டார். அந்த புத்தகத்தின் பக்கங்களை அதிவேகமாக திருப்பும் போது, அவரது கண்களில் எம்.ஜி.ஆர்., மீதிருந்த பற்றை பார்க்க முடிந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தார்.
பின், அவர் கூறியதாவது:
வேலுார் குடியாத்தத்தை சேர்ந்தவன் நான். பெங்களூருக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன. எம்.ஜி.ஆர்., படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். பள்ளி செல்லும் நாட்களில், வாத்தியார் படம் பார்க்கச் சென்று உடற்கல்வி வாத்தியாரிடம் அடி வாங்கியவன் நான். தலைமை ஆசிரியருக்கே சினிமா டிக்கெட் எடுத்து கொடுத்தவன். எனக்கு எப்போதும் ஒரே தலைவன் தான். அது, வெள்ளை தொப்பி அணிந்த, வெள்ளை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்., தான். அவரது பக்தர் நான் என்று கூறினால் மிகையாகாது.
புத்தகங்கள் விற்பனை 'தினமலர்' நாளிதழை, 40 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். புத்தக பூங்காவில் சில நாட்களுக்கு முன் நடந்த எம்.ஜி.ஆர்., விழாவை படித்து மகிழ்ந்தேன். தாமதிக்காமல், நேற்று முன்தினமே வந்து வழி தெரியாமல் வீட்டுக்கு திரும்பினேன். இன்று எப்படியாவது கண்டுபிடித்தே தீருவேன் என, சபதமெடுத்து வந்தேன். வந்ததும் நுால்களை பார்த்து அசந்தேன். தினமலர் நாளிதழுக்கு என் பாராட்டுக்கள். விரைவில் புத்தகங்களை விற்பனை செய்யுங்கள்; நுாலகம் குறித்து நிறைய விளம்பரம் செய்யுங்கள்.
இரட்டை இலை சின்னத்தை பிரபலப்படுத்தியது போல, கடல் தாமரை புத்தக பூங்காவையும் பிரபலப்படுத்துவேன். என் நண்பர்கள் அனைவரிடமும் கூறுவேன். அவர்களையும் அடிக்கடி அழைத்து வருவேன். என் வீட்டில், 25 புத்தகங்கள் இருக்கின்றன. அனைத்தும் தலைவரை பற்றியதே. வாழ்க தினமலர்... வெல்க புத்தக பூங்கா.
இவ்வாறு அவர் கூறினார்.
'எங்கள் குடும்பமே
தினமலர் வாசகர்கள்'
நம் புத்தக பூங்காவுக்கு பலரும் அன்பளிப்பாக புத்தகங்களை தந்து வருகின்றனர். இதை பார்த்த பெங்களூரு பன்னர்கட்டா சாலையில் வசிக்கும் மூத்த தினமலர் வாசகி சகுந்தலா சேஷன், 88, தன்னிடம் இருந்த புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்க நினைத்தார். அவரால் நடக்க முடியாது என்பதால் கூரியர் மூலமாக அனுப்பி உள்ளார். பார்சலில், 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. பார்சலில் கடிதத்தையும் இணைத்திருந்தார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம் அல்லாத வேறு மாநிலத்தில் தமிழ் புத்தகங்கள் கொண்ட நுாலகம் அமைப்பது சாதாரண விஷயம் அல்ல. தினமலர் நாளிதழுக்கு கோடான கோடி நன்றி. எங்கள் குடும்பமே தினமலர் வாசகர்கள் தான். நுாலகம் குறித்து நாளிதழில் வரும் செய்திகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. பலரும் புத்தகங்கள் கொடுப்பதை பார்த்து, எனக்கும் புத்தகங்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால், என்னிடம் இருந்த புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்து உள்ளேன். நன்றி தினமலர்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
