ராஜினாமா செய்ய மாட்டேன்: பேலுார் கோபாலகிருஷ்ணா 'பல்டி'
ராஜினாமா செய்ய மாட்டேன்: பேலுார் கோபாலகிருஷ்ணா 'பல்டி'
ADDED : ஆக 04, 2026 07:55 PM
பெங்களூரு: ''எம்.எல்.ஏ., பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்,'' என, பேலுார் கோபாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
ஷிவமொக்காவின் சாகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா. அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இவர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக, நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்தார். அவருக்கு, முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்று காலை, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமாரை, பேலுார் கோபாலகிருஷ்ணா சந்தித்தார். தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவரை சமாதானம் செய்த முதல்வர், வரும் நாட்களில் நல்ல பதவி வழங்குவதாக, உறுதி அளித்தார்.
சந்திப்புக்கு பின், பேலுார் கோபாலகிருஷ்ணா கூறுகையில், ''எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய இருந்தது உண்மை தான். முதல்வர் என்னை அழைத்து பேசினார். இதனால் ராஜினாமா முடிவில் பின்வாங்கி உள்ளேன்.
''முதல்வருக்காக எம்.எல்.ஏ.,வாக தொடருவேன். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று வருத்தம் இருப்பது உண்மை தான். என்னை போல பல மூத்த எம்.எல்.ஏ.,க்கள் மனவருத்தத்தில் உள்ளனர். கட்சியின் நலன் கருதி யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்,'' என்றார்.
