/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயிகளிடம் பணம் பெற்றால் 'சஸ்பெண்ட்'
/
விவசாயிகளிடம் பணம் பெற்றால் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 14, 2025 11:15 PM

பெங்களூரு: ''கெம்பேகவுடா லே - அவுட்டில், விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் போது, எந்த அதிகாரிகளாவது பணம் பெற்றிருந்தால், மாலையில் சூரியன் மறைவதற்குள் அந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் எச்சரித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஜவராயி கவுடாவின் கேள்விக்கு பதில் அளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் போது, சில அதிகாரிகள் பணம் பெற்றதாக, உறுப்பினர் ஜவராயி கவுடா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான ஆவணங்களை, அவர் எங்களிடம் அளித்தால், எந்த விசாரணையும் தேவையில்லை. மாலை சூரியன் மறைவதற்குள், அந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வேன்.
நிலத்தை இழந்த விவசாயிகளின் சங்கடம் என்ன என்பது, எனக்கு தெரியும். ஒரு பைசா கூட, விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் பெறக்கூடாது என, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, மார்க்கெட் நிலவரப்படி நிவாரணம் வழங்கப்படும்.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்ததால், நிலத்துக்கு மூன்று முதல் நான்கு சதவீதம் அதிகமான நிவாரணம் கிடைக்கிறது.
சிவராம் காரந்த் லே - அவுட்டுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், எங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த லே - அவுட்டில், அரசு 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. எங்களூக்கு ஆண்டுதோறும், 1,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. நீதிமன்ற தடையுத்தரவை நீக்குவது குறித்து, அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசிக்கப்படும். தடை நீங்கினால் பணிகளை துவக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.