ADDED : மே 08, 2026 01:02 AM

பெங்களூரு: 'சட்டவிரோதமாக நிலத்துக்கு பட்டா செய்து கொடுத்த, பெங்களூரு மேற்கு இணை கமிஷனர் ஆர்த்தி ஆனந்த், துணை கமிஷனர் அப்துல் ரப் உட்பட மற்ற அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., தலைவர் ரமேஷ் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் உட்பட, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு, ரமேஷ் எழுதிய கடிதம்:
பெங்களூரு மேற்கு மாநகராட்சி எல்லையில் உள்ள, 4.36,144 சதுர அடி பரப்பளவுள்ள நிலத்துக்கு, சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட பட்டாவை, பெங்களூரு மேற்கு மாநகராட்சி கமிஷனரின் உத்தரவுபடி, ரத்து செய்திருந்தும், இணை கமிஷனர் ஆர்த்தி ஆனந்த், 10,94,127 சதுர அடி நிலத்துக்கு சட்டவிரோதமாக பட்டா அளித்துள்ளார்.
யஷ்வந்த்பூரின், ஹெம்மிகேபுரா வார்டின் மல்லசந்திராவில் சர்வே எண் 18/14, 18/15, 18/16, 18/17, 18/18 மற்றும் 18/19ல் பத்து ஏக்கர் நிலத்தை, சதீஷ் என்பவரின் 'காசா கிராண்ட் லோட்டஸ்' என்ற நிறுவனத்தின் பெயருக்கு, சட்டவிரோதமாக பட்டா செய்து கொடுத்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் பெங்களூரு மேற்கு மாநகராட்சியின், இணை கமிஷனர் ஆர்த்தி ஆனந்த், துணை கமிஷனர் அப்துல் ரப், உதவி வருவாய் அதிகாரிகள் ரமேஷ் ராத்தோட், சிவகுமார் ஆகியோர் மீது, நடப்பாண்டு பிப்ரவரியில் புகார் செய்யப்பட்டது.
இவர்களின் முறைகேட்டால், ஜி.பி.ஏ.,வுக்கு நியாயமாக வர வேண்டிய, கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பரப்பளவுள்ள நிலத்துக்கு, பட்டா அளிப்பதற்கு முன், சட்டப்படி வருவாய்த்துறை கமிஷனர், மாநகராட்சி கமிஷனரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அனுமதி பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
