/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராகுலின் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு பதிலடியாக... 13 கேள்விகள்! :கர்நாடக காங்., அரசின் ஊழல்களுக்கு பதில் கேட்கிறது பா.ஜ.,
/
ராகுலின் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு பதிலடியாக... 13 கேள்விகள்! :கர்நாடக காங்., அரசின் ஊழல்களுக்கு பதில் கேட்கிறது பா.ஜ.,
ராகுலின் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு பதிலடியாக... 13 கேள்விகள்! :கர்நாடக காங்., அரசின் ஊழல்களுக்கு பதில் கேட்கிறது பா.ஜ.,
ராகுலின் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு பதிலடியாக... 13 கேள்விகள்! :கர்நாடக காங்., அரசின் ஊழல்களுக்கு பதில் கேட்கிறது பா.ஜ.,
ADDED : ஆக 09, 2025 04:52 AM

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஓட்டுகளை திருடி, மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மஹாதேவபுரா சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக, புதுடில்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
ஓட்டுத் திருட்டை கண்டித்து, 'எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை' என்ற பெயரில், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தியது. ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, தன் 'எக்ஸ்' தளத்தில் கர்நாடக பா.ஜ., 13 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்கும்படி கோரி உள்ளது.
கேள்விகள் வருமாறு: 1 ஆந்திரா, தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் செலவுக்காக, கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து 187 கோடி ரூபாயை ஊழல் செய்துள்ளதாக, ஈடி எனும் அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி உள்ளது. அமைச்சர் நாகேந்திராவின் ராஜினாமாவை தவிர, இம்மோசடி தொடர்பாக, அரசு வேறு என்ன நடவடிக்கை எடுத்தது? பட்டியல் ஜாதியினர் நலனுக்கான நிதியை, தனது சொந்த கட்சிக்காக பயன்படுத்தியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்கமாட்டீர்களா?
2 'முடா', தொழிலாளர் தொகுப்பு பை, வீட்டு வசதி, கலால் வரி உரிமை புதுப்பித்தல் ஊழல்கள், மது வியாபாரிகளிடம் 200 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டது என பல ஊழல்கள், உங்கள் அரசு மீது சுமத்தப்பட்டுள்ளன. உங்கள் அரசில் ஊழல் எல்லை தாண்டிவிட்டது. இது மாநிலத்தில் நீங்கள் திறந்த 'ஊழல் சந்தை'யா?
3 பட்டியல் ஜாதியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட 40,000 கோடி ரூபாய் நிதியை, சிறுபான்மையினரின் நலனுக்காக திருப்பிவிட்டு, பட்டியல் ஜாதியினருக்கு எதிராக உங்கள் அரசு துரோகம் செய்துள்ளது. அவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? எப்போது அவர்களின் பணத்தை திருப்பித் தருவீர்கள்?
4 உங்கள் அரசின் துணை முதல்வர் சிவகுமார், 'சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க, அரசியலமைப்பை கூட திருத்தம் செய்வோம்' என்று கூறினார். அவரின் இந்த அறிக்கைக்கு, நீங்கள் உடன்படுகிறீர்களா? 'அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பை திருத்த முயற்சிக்கப்படும்' என்று அவர் கூறியதற்கு, நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பீர்களா?
5 கர்நாடகாவில் உங்கள் அரசு, 2023ல் ஆட்சிக்கு வந்தபோது, மின்சாரம், பால், பெட்ரோல் விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஒவ்வொரு கன்னடர்களின் வாழ்க்கையை நரகமாக்கி உள்ளன. இந்த விலை உயர்வால், சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்திய நீங்கள், அவர்களிடம் மன்னிப்பு கேட்கமாட்டீர்களா?
6 கன்னடம் படிக்கவும், எழுதவும் தெரியாத அமைச்சருக்கு, கல்வி அமைச்சர் பதவி வழங்கியதால், கர்நாடக கல்வித் துறை சீர்குலைந்துவிட்டது. குழந்தைகளுக்கு காலணிகள், சாக்ஸ் அல்லது சீருடைகள் வழங்க கருவூலத்தில் பணம் இல்லாத அளவுக்கு அரசு திவாலாகிவிட்டது. பா.ஜ., ஆட்சியில் நிரம்பிய கருவூலத்தை, உங்கள் கட்சியின் அரசு, திவாலாக்கிவிட்டது. இதற்கு கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?
7 உங்கள் கட்சி, கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின், போதைப்பொருள், பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்புப் படையினர், பெங்களூரில் பதுங்கியிருந்த அல்-குவைதா பயங்கரவாதியை கைது செய்தனர். மைசூரில் போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலையை மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். இவை எதுவும் கர்நாடக போலீசாரின் கவனத்துக்கு வரவில்லையா? உங்கள் அரசின் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகள், உளவுத்துறை தோல்விகளுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டீர்களா?
8 உங்கள் அரசின் நீர்வாகத்தின் கீழ், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் மீதான அட்டூழியங்கள் வரம்பை மீறி உள்ளன. பெலகாவி, பாகல்கோட்டில், இச்சமூகங்களை சேர்ந்த பெண்களுக்கு எதிராக, கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. பெண்களுக்கு எதிராக இந்த கொடுமைகளுக்கு, நீங்கள் எப்போது மவுனம் கலைப்பீர்கள்?
9 உங்கள் ஓட்டு வங்கியை காப்பாற்ற, பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி மற்றும் உதயகிரியில் நடந்த வன்முறை கலவரங்களில் ஈடுபட்ட தொடரப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற்றது. சட்டத்தை மீறுபவர்களுக்கு உங்கள் அரசு ஆதரவாக நிற்கிறதா அல்லது அதை நிலை நிறுத்துவோருக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? பயங்கரவாதம், கலவரத்தை ஆதரிக்கும் நீங்கள், மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டீர்களா?
10 கள்ளச்சந்தையில் உரங்களை விற்பனை செய்வது உட்பட அரசின் விவசாய விரோத கொள்கைகளால் பல விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை, எளிதில் தொடர்பு கொள்ள முடிவதில்லை. நாட்டில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், மன்னிப்பு கேட்கமாட்டீர்களா?
11 சிலிகான் சிட்டி பெங்களூரு, இன்று பள்ளங்களால் மூழ்கி உள்ளது. உங்களின் 'பிராண்ட் பெங்களூரு' திட்டம், பெங்களூரை மோசமான பெங்களூராக மாற்றுகிறது. பாதியில் நிற்கும் மேம்பாலப் பணிகள், புறக்கணிக்கப்பட்ட பாதசாரி பாதைகள், பள்ளங்கள் நிறைந்த சாலைகளால் பெங்களூரு சீரழிந்து வருகிறது. பெங்களூரு மேம்பாட்டில் கவனம் செலுத்தாமல், முதல்வர் பதவி துணை முதல்வர் சிவகுமார் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். பெங்களூரை நரகத்தின் குழியாக மாற்றியதற்காக, பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டீர்களா?
12 ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது, போலீசாரின் எச்சரிக்கையை புறக்கணித்து, 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அரசால் நடத்தப்பட்ட இந்த கொலைக்கு கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்கமாட்டீர்களா?
13 பால், தயிர், மின்சாரம், பதிவு கட்டணங்களின் விலைகள் இரட்டிப்பாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஏழைகள், நடுத்தர மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?
இவ்வாறு அதில் கேட்கப்பட்டிருந்தன.

