/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சந்தேகங்களுக்கு பதிலளிக்க திறன் இல்லை
/
சந்தேகங்களுக்கு பதிலளிக்க திறன் இல்லை
ADDED : மே 18, 2025 08:54 PM

பெங்களூரு : ''லோக்சபா கூட்டத்தொடர் கூட்ட வேண்டும், ஊடகத்தினரை சந்தித்து, சந்தேகங்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால், இதை எதிர்கொள்ள பா.ஜ.,வினருக்கு திறமை இல்லை,'' என பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து கேள்வி எழுப்புபவர்களை, பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று பா.ஜ.,வினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன்.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்போ, தன்னால் தான் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி அல்லது விஜயேந்திரா அல்லது அசோக் ஆகியோரில் யார் பதில் அளிப்பர். அமெரிக்க அதிபர், வெளிநாட்டு கொள்கை குறித்து பேசும் போது, 100 நாடுகளுக்கு சென்ற பிரதமர், எதுவும் சொல்லாதது ஏன்.
பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை உலக அரங்கில் பகிரங்கப்படுத்த அமைக்கப்பட்ட ஏழு குழுக்களில், காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை தவிர்த்து, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசிதரூரை மட்டும் சேர்த்துள்ளனர்.
தாக்குதல் விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆனால், ராணுவத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாடு முழுதும் தேசிய கொடி அணிவகுப்பு நடத்தி, அரசியல் செய்கின்றனர்.
இதுவரை 100 நாடுகளுக்கு சென்ற பிரதமர், ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை. தன் கவுரவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அவர் செல்வதில்லை. இந்தியா - பாகிஸ்தான் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுக்கு விளக்கம் அளிக்காதது ஏன். பா.ஜ.,வுக்கு நாட்டின் பாதுகாப்பை விட, இதிலும் அரசியல் செய்வதில் தான் ஆர்வமாக உள்ளனர்.
லோக்சபா கூட்டத்தொடர் கூட்ட வேண்டும். ஊடகத்தினரை சந்தித்து, சந்தேகங்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால், இதை எதிர்கொள்ள பா.ஜ.,வினருக்கு திறமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.