/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி டாக்டர்கள் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் தகவல்
/
போலி டாக்டர்கள் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் தகவல்
போலி டாக்டர்கள் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் தகவல்
போலி டாக்டர்கள் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் தகவல்
ADDED : செப் 09, 2025 04:53 AM
பெங்களூரு: உரிய தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்ததாக கடந்தாண்டு 256 போலி டாக்டர்கள் சிக்கினர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சட்டவிரோதமாக செயல்படும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
மாநிலத்தின், பல்வேறு இடங்களில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டாக்டர் தொழில் செய்வோரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போலி டாக்டர்கள் பட்டியலில், ஹோமியோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, யுனானி, நாட்டு வைத்தியர்களும் அடங்குவர். மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் திடீரென சென்று, சோதனை நடத்துகின்றனர்.
ஆங்கில மருத்துவம் செய்ய தேவையான தகுதி இல்லையென்றாலும், உரிமம் இல்லை என்றாலும் அத்தகைய கிளினிக்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். அங்கு சிகிச்சை அளித்தவர்கள், போலி டாக்டர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கையில் 2024ல் 256 பேரும், நடப்பாண்டு 89 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களது கிளினிக்கு களுக்கு சீல் வைக்கப்பட்டன. சிலர் போலியான சான்றிதழ் வைத்து உள்ளனர்.
போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட சுகாதார அதிகாரிகள், ஆயுஷ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நடவடிக்கை எடுத்து, மாதந்தோறும் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
சமீபத்தில் போலி கிளினிக் மற்றும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பதிவு எண், மருத்துவமனை மற்றும் உரிமையாளர்களின் பெயரை, கட்டடம் முன்பாக அறிவிப்பது கட்டாயம்.
ஒருவேளை பதிவு செய்யாமல், லைசென்ஸ் பெறாமல் நடத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.
பதிவு செய்யாமல் கிளினிக் நடத்தினால், 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், அந்த கிளினிக்குகள் மூடப்படும்.
வட மாவட்டங்கள், கல்யாண கர்நாடகா பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கலபுரகியில் 100க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர், பல்லாரி, ஹாவேரியிலும் போலி டாக்டர்கள் அதிகம் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.