/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
/
மைசூரு அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
மைசூரு அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
மைசூரு அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
ADDED : ஏப் 13, 2025 07:21 AM

மைசூரு : வரலாற்று பிரசித்தி பெற்ற, மைசூரு அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நுழைவு கட்டணம் அதிகரித்தும், இவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
மைசூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், அரண்மனைக்கு தனி மவுசு உள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற அரண்மனை, இன்றைய கட்டடக்கலை வல்லுநர்களுக்கு சவால் விடும் வகையில். கலை நயத்துடன் உள்ளது.
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், அரண்மனையை பார்க்காமல் செல்வது இல்லை.
அரண்மனையை பார்ப்பதற்காகவே, மைசூருக்கு வருவோரும் உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அரண்மனையின் அழகு, கம்பீரத்தை பார்த்து வியப்படைகின்றனர். 2024 ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் இறுதி வரை, மைசூருக்கு 39.35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்தனர்.
இதற்கு முன்பு அரண்மனையில், வெளி நாட்டு சுற்றுலா பயணியரின் நுழைவு கட்டணம் 100 ரூபாயாக இருந்தது. 2024 நவம்பரில், வெளிநாட்டு பயணியருக்கான டிக்கெட் கட்டணம் திடீரென 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டும், வெளி நாட்டினரின் எண்ணிக்கை குறையவில்லை.
இதுகுறித்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
நுழைவு கட்டணம் பல மடங்கு அதிகரித்தும், மைசூரு அரண்மனையை பார்க்கும் ஆர்வம் வெளி நாட்டவருக்கு குறையவில்லை. தினமும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
கடந்த ஓராண்டில், மைசூரு அரண்மனையை பார்க்க, 44,788 வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். 2023ல் மொத்தம் 40.56 லட்சம் சுற்றுலா பயணியர் வந்தனர்.
இதில் 35,604 பேர் வெளிநாட்டினர். டிக்கெட் கட்டணம் அதிகரித்த பின், இவர்களின் வருகை குறையும் என, நினைத்தோம்; மாறாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

