/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு கால் இழந்தவருக்கு நிவாரணம் அதிகரிப்பு
/
ஒரு கால் இழந்தவருக்கு நிவாரணம் அதிகரிப்பு
ADDED : அக் 08, 2025 09:14 AM
பெங்களூரு: 'விபத்து வழக்குகளில், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, இழப்பீடு வழங்கும்போது, அவர்களின் வேலை வாய்ப்பு, வருவாயை கருத்தில் கொள்ள வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல்லின் தொம்மசந்திராவில் வசிக்கும் முனியப்பா, 62, காய்கறி வியாபாரம் செய்து வந்தார். 2022 மே 22ல் சாலை விபத்தில் காயமடைந்தார்.
இடது காலில் பலத்த அடிபட்டதால், மூட்டில் இருந்து கீழ்ப்பகுதி வரை அகற்றப்பட்டது. இதனால் அவர், காய்கறி வியாபாரத்துக்கு செல்ல முடியவில்லை.
தனக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார். தீர்ப்பாயம் 5.98 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. நிவாரண தொகையை அதிகரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் முனியப்பா முறையிட்டார்.
இம்மனு நீதிபதி சில்லகூரு சுமலதா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதம், பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிபதி, 'மனுதாரரின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது. காய்கறி வியாபாரியான அவர், தினமும் 2,000 ரூபாய் சம்பாதித்ததாக கூறியுள்ளார்.
'இனி அவரால் வியாபாரம் செய்ய முடியாது. ஆனால் தீர்ப்பாயம், இவரது மாத வருவாய் 15,000 என, கணக்கிட்டு நிவாரணம் வழங்கியுள்ளது. விபத்து வழக்குகளில், உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, இழப்பீடு வழங்கும்போது, அவர்களின் வேலை வாய்ப்பு, வருவாயை கருத்தில் கொள்ள வேண்டும்' என, கருத்துத் தெரிவித்தார்.
நிவாரண தொகையை 11.40 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.