டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு புத்தகத்தால் ஊக்கம்: இயக்குநர் கணேசன் நெகிழ்ச்சி
டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு புத்தகத்தால் ஊக்கம்: இயக்குநர் கணேசன் நெகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2026 04:46 AM

பெங்களூரு: 'டி.வி.ஆரின் வாழ்க்கை வரலாறு புத்தகமான 'கடல்தாமரை' எனக்கு பெரும் ஊக்கம் அளிக்கிறது' என்று, கடல் தாமரை புத்தக பூங்காவில் இயக்குனர் கணேசன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சிவாஜிநகர் குயின்ஸ் சாலை 'தினமலர்' அலுவலகத்தின், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு திரைப்பட இயக்குனர் கு.கணேசன் நேற்று முன் தினம் வந்தார். தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு புத்தகமான கடல் தாமரையை ஆர்வமாக படித்தார்.
பின், அவர் கூறியதாவது:
நான் பல பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்றுள்ளேன். எங்கேயும் நுாலகத்தை பார்த்தது இல்லை. இங்கு பார்த்தது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.
நுாலகங்கள் தான், நமக்கு நல்ல விஷயங்களை கற்று கொடுக்கும். இன்றைய இளம் தலைமுறை நுாலகத்திற்கு செல்வதை விட்டுவிட்டனர். அவர்களை இங்கு வரவழைக்க வேண்டும். எனது நண்பர்களிடம் இந்த நுாலகம் பற்றி சொல்கிறேன்.
தமிழர்களுக்கு இந்த நுாலகம் பெரும் பங்களிப்பாக இருக்கும். தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு புத்தகமான கடல் தாமரை புத்தகத்தை படித்த போது, உடலில் புல்லரித்து விட்டது.
அவரின் வாழ்க்கை வரலாறு எனக்கு ஊக்கமளிக்கிறது. நுாலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. வரலாறு புத்தகங்களின் தேர்வு அருமையாக உள்ளது.
நான் இயக்கும் திரைப்படங்களின் மூலம் சமூக கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் இயக்கிய நம்ம மகு என்ற திரைப்படம் 23 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. தற்போது அஞ்சலை என்ற பெயரில் படம் இயக்குகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
