அமைச்சரின் தனி செயலர் சொத்து குவிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை
அமைச்சரின் தனி செயலர் சொத்து குவிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை
ADDED : பிப் 13, 2026 05:33 AM
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் சர்பரஸ் கானுக்கு எதிரான லோக் ஆயுக்தா விசாரணைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் சர்பரஸ் கான். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சர்பரஸ் கான் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்திய லோக் ஆயுக்தாவில், பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசார், விசாரணைக்கு தயாராகி வந்தனர்.
இதற்கிடையில், தன் மீது லோக் ஆயுக்தா பதிவு செய்த வழக்கையும், விசாரணையையும் ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சர்பரஸ் கான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
வருமான வரித்துறையில் அறிவிக்கப்பட்ட அனைத்து விபரங்களும் உள்ளன. பறிமுதல் செய்யும் போது, கைப்பற்றப்பட்ட பணத்தின் சரியான தகவலும் லோக் ஆயுக்தாவிடம் இல்லை. ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளன.
எனவே, இந்த வழக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வராது அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்தின் கீழ் வராது. எனவே, அவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
போலீசாரின் சந்தேகங்களுக்கு சர்பரஸ் கான் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை, பிப்., 27க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
