ADDED : மே 06, 2026 04:45 AM
பெங்களூரு: சிவாஜிநகர் பவுரிங் அரசு மருத்துவமனை காம்பவுண்டு சுவர் இடிந்து, ஏழு பேர் பலியானது குறித்து விசாரிக்க, லோக் ஆயுக்தா விசாரணை குழுவை அமைத்து உள்ளது.
பெங்களூரில் கடந்த மாதம் 29ம் தேதி கொட்டி தீர்த்த கனமழையால், சிவாஜிநகர் பவுரிங் அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், நடைபாதையில் நின்ற சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில், லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகள் அலட்சியத்தால் சுவர் இடிந்து விழுந்ததாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏழு பேர் இறந்தது பற்றி லோக் ஆயுக்தா தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது.
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரிக்க, விசாரணை குழுவை லோக் ஆயுக்தா நேற்று அமைத்து உள்ளது. இந்த குழுவில் மாவட்ட நீதிபதி, தொழில்நுட்ப இன்ஜினியர் உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.
வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக பவுரிங் மருத்துவமனை டீன் மனோஜ் குமாரிடம் இருந்து சம்பவம் குறித்த தகவல்களை லோக் ஆயுக்தா சேகரித்தது.
