ஐ.பி.எல்., டிக்கெட் குறித்து சட்டசபையில் விவாதம் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஒருமித்த கோரிக்கை
ஐ.பி.எல்., டிக்கெட் குறித்து சட்டசபையில் விவாதம் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஒருமித்த கோரிக்கை
ADDED : மார் 27, 2026 05:32 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் தொடர்பாக, சட்டசபையில்நேற்று நீண்ட விவாதம் நடந்தது. 'ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்கும் ஐந்து டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும்' என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக வேண்டுகோள் விடுக்க, 'நான்கு டிக்கெட்டுகள் வழங்க பரிந்துரைக்கிறேன்' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று பெங்களூரு நகரின் வளர்ச்சி குறித்த நடந்த விவாதம் நடந்தது. அப்போது, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: 16.32 ஏக்கர் பரப்பளவு உடைய சின்னசாமி மைதானத்திற்கு மாத வாடகையாக வெறும், 1,600 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
அப்படி இருக்கையில், ஒரு ஐ.பி.எல்., டிக்கெட் வாங்குவதற்கு எம்.எல்.ஏ.,க்கள் கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐ.பி.எல்., டிக்கெட் கொடுக்கப்படுவதில்லை. ஒரு டிக்கெட், 20,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நாம் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த காஷப்பன்னவர்: குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். ஆனால், ஒரு டிக்கெட் மட்டுமே தரப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது. எனவே, டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க முடியுமா. நாங்கள் வி.ஐ.பி.,க்கள் வரிசையில் நிற்க முடியாது. மாநில அரசிடம் இருந்து அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு டிக்கெட் தர மறுக்கின்றனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் குறைந்தது ஐந்து டிக்கெட்டுகள் தர வேண்டும்.
அசோக்: கே.எஸ்.சி.ஏ., எனறகர்நாடகா கிரிக்கெட் அசோசியஷேனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். பின், அவர்கள் தானாக வழிக்கு வருவர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல்: கள்ள சந்தையில் டிக்கெட் விற்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பணம் கொடுத்தாலும் டிக்கெட் கிடைப்பதில்லை.
சபாநாயகர் காதர்: இந்த பிரச்னையை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷனுடன் பேச்சு நடத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்களை அவமதிப்பது சரியல்ல.ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் நான்கு டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமார்: எம்.எல்.ஏ.,க்கள் சொல்லுவதில் தவறில்லை. நான் கே.எஸ்.சி.ஏ., தலைவர் வெங்கடேஷை சந்தித்து பேசுகிறேன். எம்.எல்.ஏ.,க்களுக்கு சலுகைகள் கிடைக்க வேண்டும். இது, தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
