ஓடுபாதையில் பறந்து வந்த ராட்சத பலுான் விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு?
ஓடுபாதையில் பறந்து வந்த ராட்சத பலுான் விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு?
ADDED : பிப் 10, 2026 04:41 AM

தேவனஹள்ளி: ஓடுபாதையில் ராட்சத பலுான் பறந்து வந்த நிலையில், பெங்களூரு விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுந்து உள்ளது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. முதல் முனையத்தில் இருந்து உள்நாட்டிற்கும், இரண்டாம் முனையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமானங்கள் வருகை, புறப்பாடு உள்ளது.
இந்நிலையில் இரண்டு முனையத்தில் விமானங்கள் புறப்பட துவங்கும் இடத்தின், ஓடுபாதையில் ராட்சத பலுான் பறந்து வந்ததை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.
அந்த பலுானை எடுத்து சென்று, விமான நிலையத்தின் அருகே உள்ள ஏரியில் விட்டனர்.
ஓடுபாதையில் பலுான் பறந்த போது விமானம் எதுவும் வராததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. பி.சி.டி., என்ற கட்டுமான நிறுவனத்தினர் தங்கள் நிறுவன விளம்பரத்துக்காக, பலுானை காற்றில் பறக்க விட்டதும், காற்றின் அழுத்தத்தால் கயிறு அறுந்து பலுான், விமான நிலைய ஓடுபாதைக்குள் வந்ததும் தெரிந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரில், பி.சி.டி., நிறுவனம் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, விமான நிலைய ஓடுபாதையில் நாய் ஓடிய காட்சி வைரலான நிலையில், இப்போது பலுான் பறந்து வந்திருப்பது, விமான நிலையத்தில் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
