/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விடைபெறுகிறாரா முதல்வர் சித்தராமையா?
/
விடைபெறுகிறாரா முதல்வர் சித்தராமையா?
ADDED : அக் 12, 2025 03:51 AM

பெங்களூரு: அமைச்சர்களை இரவு விருந்துக்கு திடீரென அழைத்து இருப்பதன் மூலம், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விடைபெற போகிறாரோ என்ற பேச்சு, கர்நாடக அரசியலில் எழுப்பப் படுகிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் முதல்வர் பதவியில் மாற்றம் நடக்கலாம் என்ற பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரவலாக அடிபடுகிறது.
இதற்கு, ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் என்று மேலிடத்திடம் சித்தராமையா அளித்த வாக்குறுதியே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வாக்குறுதியின் அடிப்படையில், இம்மாத இறுதியில் சித்தராமையாவுக்கான இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலம் நிறைவடைகிறது. அதனால் சிவ குமார், மாநிலத்தின் முதல்வராக பதவியேற்பார் என்று தொடர்ந்து மாநிலத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தன் அமைச்சரவை சகாக்களுக்கு, நாளை இரவு விருந்து அளிக்கப்போவதாக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதையும் இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் இணைத்து அமைச்சர்களுக்கு முதல்வர் சித்தராமையா பிரியாவிடை கொடுக்கப் போகிறாரா என்று நேற்று கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்புக்கு இடையே மாநில அமைச்சரவையில் இருந்து 15 முதல் 20 பேரை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு பதவி அளிக்கப்போவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசிக் கொள்கின்றனர்.
சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கியே தீர வேண்டும் என்று, சித்தராமையாவை நச்சரிக்க துவக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் ஏராளமானோர், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஊடகங்கள் முன் தங்கள் ஆசையை கொட்டி வருகின்றனர்.
ஆனால் அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை, முதல்வரும் துணை முதல்வரும் நேற்று மீண்டும் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.