/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு சரிகிறதா?
/
கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு சரிகிறதா?
ADDED : ஜூன் 17, 2025 11:03 PM

கர்நாடகாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் செல்வாக்கு சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது தேர்தல் நடந்தால், பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்ற ஆய்வறிக்கை வெளியாகி, ஆளும் காங்கிரசின் துாக்கத்தை கெடுத்துள்ளது.
கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தல் நேரத்தில், காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசியது. அன்றைய ஆளுங்கட்சி பா.ஜ., மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு, 40 சதவீதம் கமிஷன் உள்ளிட்ட விஷயங்கள், காங்கிரஸ் வெற்றி பெற வலுவான அஸ்திரமாக அமைந்தன. இவற்றை அக்கட்சியினர் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
மற்றொரு பக்கம், 'கிரஹ லட்சுமி, கிரஹ ஜோதி, சக்தி, அன்னபாக்யா, யுவநிதி' என, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை காங்கிரஸ் அறிவித்தது. இதுவும் அக்கட்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததுமே வாக்குறுதிகளை செயல்படுத்தியதால், கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.
இந்த செல்வாக்கு, 2028 தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உதவும் என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, காங்., தலைவர்கள் நம்பினர்.
ஆனால், இரண்டே ஆண்டுகளில், அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால், பா.ஜ.,வின் பலம் அதிகரிக்கும் என்ற ஆய்வறிக்கை வெளியாகி, காங்கிரசின் துாக்கத்தை கெடுத்துள்ளது.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் என அனைவரும், 'எங்கள் அரசின் வாக்குறுதி திட்டங்களால், மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சக்தி, கிரஹலட்சுமி திட்டங்களால் பெண்களுக்கு பணம் மிச்சமாகிறது' என, கூறினர். ஆனால் இத்திட்டங்களால் சாதகங்களை விட, பாதகங்களே அதிகம். மாநிலத்தின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியுள்ளது.
திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், மாற்று வழிகளை அரசு கையாள்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துகிறது. மின் கட்டணம், குடிநீர், பால், மதுபானம், உணவு தானியங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. விலை உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர்.
மற்றொரு பக்கம் வாக்குறுதி திட்டங்களும் பயனாளிகளை சரியாக சென்று அடையவில்லை. எதிர்க்கட்சியினரும், 'காங்கிரஸ் அரசு மக்களுக்கு ஒரு கையில் கொடுத்து, மற்றொரு கையால் பறிக்கிறது' என, சாடுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகளாகின்றன. இதை முன்னிட்டு, 'பீப்பிள்ஸ் பல்ஸ் - கோடமோ' என்ற அமைப்பு, மக்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்ள ஆய்வு நடத்தியது. இதில் ஆளுங்கட்சி மீது, மக்கள் வெறுப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
'வாக்குறுதி திட்டங்கள் என்பது, வெறும் கண் துடைப்பு. சரியாக செயல்படுத்தவில்லை' என, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
ஆய்வு அறிக்கையின்படி, 52 சதவீதம் ஆண்கள், 49 சதவீதம் பெண் வாக்காளர்கள், காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கக் கூடும்.
வேலையில்லா இளைஞர்கள், இளம்பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட 'யுவநிதி' திட்டம், சரியாக செயல்படுத்தாததால், அவர்கள் நிராசை அடைந்துள்ளனர். 'இலவசங்களை விட, மாநிலத்தின் முன்னேற்றம் மட்டுமே, தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது' என, உணர்ந்துள்ளனர்.
ஆய்வில், 15 - 20 வயது வரையிலான 56 சதவீதம் இளம் வாக்காளர்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், 26 - 35 வயது வரையிலான, 48.6 சதவீதம் வாக்களர்கள், 35 - 50 வயது வரையிலான, 50 சதவீதம் வாக்களர்கள், காங்கிரசுக்கு எதிராகவும் உள்ளனர். கர்நாடகாவின் பல கிராமங்கள், காங்கிரசின் கோட்டை.
ஆனால், இப்போது அங்குள்ள 52 சதவீதம் மக்களின் ஆதரவு, பா.ஜ.,வுக்கு உள்ளது. இது பா.ஜ., நகர்ப்புற கட்சி என்ற கருத்தை பொய்யாக்கியுள்ளது.
காங்கிரசுக்கு தர்மசங்கடமான, மற்றொரு அம்சமும் அறிக்கையில் உள்ளது. கர்நாடகாவின் 73.9 சதவீதம் மக்கள், நரேந்திர மோடியே தங்களுக்கு விருப்பமான பிரதமர் என, கூறியுள்ளனர். 17 சதவீதம் மக்கள், யோகி ஆதித்யநாத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக உள்ளனர்.
காங்கிரசின் ஓட்டு வங்கியில் அடையாளம் காணப்படும் மக்களில், 37.8 சதவீதம் பேர், தங்களின் சொந்த கட்சி தலைவர்களை விட, மோடியை விரும்புகின்றனர். இவர்களில் 40.6 சதவீதம் பேர் ராகுலையும், 5 சதவீதம் பேர் கார்கேவையும் ஆதரிக்கின்றனர்.
ம.ஜ.த.,வின் ஓட்டு வங்கியில் அடையாளம் காணப்படும் 73.2 சதவீதம் பேர், மோடியை ஆதரிக்கின்றனர். ராகுலுக்கு 5.8 சதவீதம் பேர், கார்கேவை 0.6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். காங்கிரசின் குருபர் மற்றும் ஒக்கலிகர் சமுதாயங்களும் கூட, மோடியின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
காங்கிரசுக்கு நெருக்கமான குருபர் சமுதாயத்தின் 58 சதவீதம், மாதிக சமுதாயத்தின் 63.5 சதவீதம், விஸ்வ கர்மா 78.2 சதவீதம், நாயக் 74 சதவீதம், வால்மீகி சமுதாயத்தின் 72.1 சதவீதம், மராத்தியின் 71.2 சதவீதம் பேர், 'மோடியே எங்கள் சாய்ஸ்' என, கூறியுள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை.
குறிப்பிட்ட சமுதாய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு மட்டுமே, காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், பா.ஜ.,வை ஆதரிக்கின்றனர்.
16.5 சதவீதம் விவசாயிகள் மட்டுமே, காங்கிரசை ஆதரித்துள்ளனர். மத்திய அரசு விவசாயிகளுக்காக செயல்படுத்திய, பல திட்டங்களை காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது. ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், சுய தொழில் செய்வோர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர்.
'பா.ஜ., தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல. பா.ஜ.,வால் மட்டுமே நல்லாட்சியை கொடுக்க முடியும். இலவச திட்டங்கள் மீது, தங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஜாதிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த, காங்கிரஸ் முற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயங்களை முன்னேற்றுவதில் மட்டுமே, ஆர்வம் காட்டுகிறது' என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
'இப்போது தேர்தல் நடந்தால், பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் பலம் குறையும்' என்பதை ஆய்வு விவரித்துள்ளது. இந்த அறிக்கை காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- நமது நிருபர் -.