காங்கிரசில் கில் லட்சுமண் சவதி ஓரம் கட்டப்படுகிறாரா?
காங்கிரசில் கில் லட்சுமண் சவதி ஓரம் கட்டப்படுகிறாரா?
ADDED : பிப் 04, 2026 06:11 AM

பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆன, லட்சுமண் சவதி கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படு கிறாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
பெலகாவி மாவட்டம், அதானி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, 65. இவர் முன்பு பா.ஜ.,வில் இருந்தவர். அக்கட்சியில் இருந்த போது துணை முதல்வராக பதவி வகித்தார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், அதானி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனார். பா.ஜ.,வில் துணை முதல்வராக இருந்ததால், காங்கிரசில் தனக்கு முக்கிய இலாகாவுடன் கூடிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
லிங்காயத்தின் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த இவர், பெலகாவி அரசியலில் தன்னை பஞ்சமசாலி தலைவராக முன்நிறுத்தி கொள்ள முயற்சித்தார். ஆனால் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரும், பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது செல்வாக்கிற்கு முன், லட்சுமண் சவதியின் முயற்சி எடுபடவில்லை.
மேலும், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை மீறி, லட்சுமண் சவதியால் ஒன்றும் செய்ய முடியாததால், அமைதியாகி விட்டார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரிலும், லட்சுமண் சவதியை காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சட்டசபைக்கு வரும் அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்கிறார்.
யாரும் அவருடன் பேசுவதும் இல்லை. இதன்மூலம் கட்சியில் இருந்து அவர் ஓரம் கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசைக்கு சென்று தனது நண்பர்களுடன் பேசும் லட்சுமண் சவதி, இம்முறை அந்த பக்கமும் செல்லவில்லை. இருக்கையில் அமர்ந்து ஏதோ யோசித்தபடி உள்ளார். என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
- நமது நிருபர் -
