/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிச்சா சுதீப்பை பழிவாங்க முயற்சியா? துணை முதல்வர் சிவகுமார் மறுப்பு
/
கிச்சா சுதீப்பை பழிவாங்க முயற்சியா? துணை முதல்வர் சிவகுமார் மறுப்பு
கிச்சா சுதீப்பை பழிவாங்க முயற்சியா? துணை முதல்வர் சிவகுமார் மறுப்பு
கிச்சா சுதீப்பை பழிவாங்க முயற்சியா? துணை முதல்வர் சிவகுமார் மறுப்பு
ADDED : அக் 09, 2025 04:20 AM

பிடதி : 'பிக்பாஸ்' வீட்டுக்கு 'சீல்' வைத்து நடிகர் கிச்சா சுதீப்பை பழிவாங்க துணை முதல்வர் சிவகுமார் முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதை சிவகுமார் மறுத்துள்ளார்.
கன்னட 'பிக்பாஸ்' 12வது சீசனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கான 'செட்' பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, நிகழ்ச்சியை நடத்தி வரும் வேல்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. தவிர நிகழ்ச்சியை தற்காலிகமாக நடத்த அனுமதி கோரியும், வீட்டில் உள்ள சிக்கல்களை தீர்க்க 15 நாட்கள் அவகாசம் வழங்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கும் வேல்ஸ் ஸ்டூடியோ தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்த விவகாரம், மாநில அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பிக்பாஸ் 'ஷெட்'டுக்கு சீல் வைத்ததற்கு துணை முதல்வர் சிவகுமாரே காரணம் என, ம.ஜ.த., - பா.ஜ., கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, 'நடிகர்களின் நட் போல்ட்டுகளை கழற்றுவேன்' என, துணை முதல்வர் சிவகுமார் காட்டமாக பேசியிருந்தார். இதற்கு கிச்சா சுதீப் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பழிவாங்குவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிவகுமார் முடக்குவதாக கூறி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
இந்த விஷயத்தில் ம.ஜ.த., - பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு என் பெயரை சொல்லவில்லை என்றால் துாக்கம் வராது. பிக்பாஸ் வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ராம்நகர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என, ராம்நகர் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தினேன். அந்த வீட்டில் உள்ள பிரச்னைகளை சட்டத்தின்படி தீர்க்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்த பயனும் இல்லை!
பிக்பாஸ் வீடு மூடப்பட்டதற்கு ஜாலிவுட் ஸ்டூடியோஸ் தான் பொறுப்பு. என்னுடன் துணை முதல்வர் சிவகுமார் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிக்பாஸ் வீட்டை திறப்பது குறித்த அதிகாரம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமே உள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கிடையாது. அவர்களுக்கு மீண்டும் வீடு திறக்கப்பட வேண்டும் என்றால் வாரியத்திடம் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு யாரிடமும் சென்று மனு அளித்தாலும் எந்த பயனும் இல்லை.
பி.எம்.நரேந்திர சுவாமி,
தலைவர்,
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்.