/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த ராகுல் அழுத்தம்?: இல்லவே இல்லை என்கிறார் முதல்வர் சித்தராமையா
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த ராகுல் அழுத்தம்?: இல்லவே இல்லை என்கிறார் முதல்வர் சித்தராமையா
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த ராகுல் அழுத்தம்?: இல்லவே இல்லை என்கிறார் முதல்வர் சித்தராமையா
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த ராகுல் அழுத்தம்?: இல்லவே இல்லை என்கிறார் முதல்வர் சித்தராமையா
ADDED : ஏப் 21, 2025 05:06 AM

கர்நாடகாவில் 2015ல் காங்கிரஸ் ஆட்சியின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அப்போதைய பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவர் காந்தராஜ் தலைமையில் பணிகள் நடந்தது. இதற்காக, 167 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
கடந்த 2017ல் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தன. ஆனால், 2018ல் சட்டசபை தேர்தல் நடக்க இருந்ததால், அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அப்போது நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இந்த ஆட்சியில் ஜாதிவாரி அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் காங்.,
இதன் பின், 2023ல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 2023 டிசம்பரில் சித்தராமையாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் தகவல்கள் ரகசியமாக கசிந்தன. மாநிலத்தில் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக கருதப்படுகிற ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினரை விட, சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தகவல் வெளியானது.
இதையறிந்த பா.ஜ., - ம.ஜ.த., போன்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், சில அமைச்சர்களுமே தங்கள் சமூகங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக ஆதங்கப்பட்டனர். இதனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் காலம் தாழ்த்தினார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர்கள் உட்பட பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. இதை அடக்க, ஜாதிவாரி அறிக்கை குறித்து விவாதிக்க, கடந்த 17ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டம், பெங்களூரில் நடத்தப்பட்டது.
காரசார விவாதம்
இதில், மல்லிகார்ஜுன் உள்ளிட்ட லிங்காயத் அமைச்சர்கள் ஒருபுறமும், துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான ஒக்கலிக அமைச்சர்கள் மறுபுறமும் அறிக்கையை அமல்படுத்த கூடாது என காரசாரமாக கூறி உள்ளனர்.
ஒரு சில அமைச்சர்கள், அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என முரண்டு பிடித்தும் உள்ளனர். எரிச்சல் அடைந்த சித்தராமையா அனைவரையும் சமாதானம் செய்ததாக ஒரு மூத்த அமைச்சர் கூறினார்.
இது ஒரு புறமிருக்க, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சித்தராமையாவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதாகவும், அதில், 'கர்நாடகாவில் விரைவில் ஜாதிவாரி அறிக்கையை அமல்படுத்த வேண்டும்; காலம் தாழ்த்த வேண்டாம்' என, நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இது பற்றி, முதல்வர் சித்தராமையா தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
அசலும், நகலும்
ஆளுங்கட்சி தரப்பில் பரபரப்பு நிலவிய வேளையில், நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான அசோக் அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் ஒரிஜினல் காப்பி, சித்தராமையாவின் வீட்டில் பத்திரமாக உள்ளது. அதே சமயம், அறிக்கையின் நகல் தான், விதான் சவுதாவில் உள்ளது. விதான் சவுதாவில் உள்ள பெட்டியை திறந்த போது, நகல் அறிக்கை இருந்ததாக, பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேவே கூறினாரே. அதை யாராலும் மறுக்க முடியாது.
இது குறித்து பரமேஸ்வரிடம் கேட்டால், அவர் எனக்கு எதுவும் தெரியாது என கூறுவார். அவர் பாவம், அவருக்கு உண்மையிலே ஒன்றும் தெரியாது. அறிக்கை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளது.
ஜாதிவாரி அறிக்கைக்கு இயக்கம், திரைக்கதை, வசனம் என அனைத்தையும் சித்தராமையா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், நேற்று பெலகாவி விமான நிலையத்தில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
ஜாதிவாரி அறிக்கை என் வீட்டில் உள்ளது என கூறியதன் மூலம் அசோக் மீண்டும் ஒரு பொய்யான தகவலை முன்வைத்து உள்ளார். அவர் எப்போதாவது உண்மையை சொல்லி இருக்கிறாரா. அறிக்கையின் அசலை என்னால் எப்படி பெற முடியும்.
ராகுல், எந்த கடிதமும் எனக்கு எழுதவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்தும்படி அழுத்தமும் தரவில்லை. ஆனால், அறிக்கை குறித்து அவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அவரிடம் ஒப்புதல் வாங்கிய பின்னரே அறிக்கையை சமர்ப்பித்தேன். அவரின் ஒப்புதல் இல்லாமல் என்னால் சமர்ப்பிக்க முடியுமா.
சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் எந்த பிரச்னையும் எழவில்லை. அமைச்சர்கள் யாரும் சத்தமாக பேசவில்லை. அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
லிங்காயத், ஒக்கலிகர், பிராமணர் என எந்த ஜாதிக்கும் அநீதி இழைக்கப்படாது. இது, சமூக பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜாதி போன்றவற்றால் பிற்படுத்தப்பட்டோர் என எத்தனை நாட்களுக்கு கூற முடியும். அனைவரும் சமமாக வாழ வேண்டாமா. அனைத்து ஜாதியினருக்கும் சமமான கல்வி வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் கையிலும் அதிகாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

