ADDED : ஜூலை 29, 2026 11:52 PM
பெங்களூரு: அடுத்த மாதம் நடக்க உள்ள, 945 வேளாண் அலுவலர்களுக்கான போட்டித்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலத்தில் வேளாண் துறையில், 945 ஏ.ஓ., எனும் வேளாண்மை அலுவலர் மற்றும் ஏ.ஏ.ஓ., எனும் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்வை கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையமே நடத்துகிறது.
இந்த தேர்வை வழக்கமாக, பி.எஸ்சி., வேளாண் பட்டதாரிகள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், இம்முறை நடக்கும் தேர்வில் பி.இ., பயோடெக்னாலஜி மற்றும் பி.டெக்., பயோடெக்னாலஜி பட்டதாரிகளும் எழுதலாம் என கடந்த மாதம் 19ம் தேதி அறிவிக்கப்பட்டது .
இதை தொடர்ந்து தேர்வு எழுத 36,313 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில், 1,022 பேர் பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் ஆவர்.
இதற்கு வேளாண் பட்டதாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'வேளாண் துறையில் எங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகளை நீக்கிவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும்' என தார்வாட், ஷிவமொக்கா வேளாண் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
'போட்டித்தேர்வில் பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் பங்கேற்பது வேளாண் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி' என கல்வியாளர்கள் கூறி உள்ளனர்.
இதனால், அடுத்த மாதம் நடக்க இருந்த போட்டித்தேர்வு ரத்து செய்யக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாக, கே.இ.ஏ., வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
