ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை சித்தராமையாவின் செல்வாக்கை குறைக்க முயற்சி?
ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை சித்தராமையாவின் செல்வாக்கை குறைக்க முயற்சி?
ADDED : ஏப் 22, 2026 01:37 AM

- நமது நிருபர் -
முதல்வர் பதவியை விட்டுத் தராமல், ஆட்சி காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற பிடிவாதத்தில் உள்ள சித்தராமையாவின் செல்வாக்கை குறைத்து, பலவீனமாக்க காங்கிரசில் முயற்சி நடக்கிறது. அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் நீக்கப்படுகின்றனர்.
கர்நாடகாவில் பல மாதங்களாக, முதல்வர் பதவி தொடர்பாக, சர்ச்சை நடக்கிறது. முதல்வர் பதவிக்காக துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார். சட்டசபை தேர்தலின் போது, செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தனக்கு முதல்வர் பதவியை வழங்கும்படி நெருக்கடி கொடுக்கிறார்.
கட்சியே முக்கியம் ஆனால், பதவியை தியாகம் செய்ய, சித்தராமையா தயாராக இல்லை. முதல்வர் மாற்றம் விஷயத்தில், மாநில அமைச்சர்கள், தலைவர்கள் இடையே, கருத்து வேறுபாடு இருப்பதை போன்று, மேலிட தலைவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு உள்ளது.
மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு, சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்த ஆர்வம் உள்ளது. இதை பற்றி அவர், கட்சி கூட்டங்களிலும் கூறியுள்ளார். தனி நபரை விட, கட்சியே முக்கியம். ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என, ஆலோசனை கூறினார்.
ஆனால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் ஆகியோர், சித்தராமையாவே முதல்வர் பதவியில் நீடிக்கட்டும் என, கூறுகின்றனர். இதனால், வெறுப்படைந்த சுர்ஜேவாலா மவுனமாகி விட்டார்.
முதல்வர் பதவிக்காக, பல முறை சிவகுமார் டில்லிக்கு சென்றும், ராகுலை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதற்கிடையே சித்தராமையாவும் மவுனமாக இல்லை. முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள, தீவிரமாக முயற்சிக்கிறார். சிவகுமாரின் நெருக்கடிக்கு மேலிடம் பணியக்கூடும் என கலக்கமடைந்துள்ள சித்தராமையா, தன் ஆதரவாளர்கள் மூலமாக பதவியை காப்பாற்றி கொள்கிறார்.
பாதுகாப்பு அரண் அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, மஹா தேவப்பா, ஜமீர் அகமது கான், முன்னாள் அமைச்சர் ராஜண்ணா உட்பட பலர் சித்தராமையாவுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கின்றனர். இவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற கூடாது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும். இது வரும் தேர்தலில், கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என, எச்சரிக்கின்றனர்.
கட்சி மேலிடமும் சித்தராமையாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, சிவகுமாருக்கு அளிப்பதில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இதே காரணத்தால், கட்சியில் இவரது செல்வாக்கை குறைத்து, பலவீனமாக்க, காங்கிரசில் முயற்சி நடக்கிறது. அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக குறி வைக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே, ராஜண்ணா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டில், அப்துல் ஜப்பார் சிறுபான்மை பிரிவு தலைவர் பதவியில் இருந்து மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
வெட்டப்படும் காய்கள் எம்.எல்.சி., நசீர் அகமதுவிடம், முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து, பலவந்தமாக ராஜினாமா பெறப்பட்டது. சித்தராமையா இரண்டாவது முறை முதல்வரான போது நசீர் அகமதுவும், கோவிந்த ராஜும் முதல்வரின் அரசியல் செயலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும், சித்தராமையாவுக்கு வலது கை, இடது கையாக இருந்தனர். எந்த நிகழ்ச்சி, ஆலோசனை கூட்டங்கள் என்றாலும், இருவரும் தவறாமல் ஆஜராவர். பட்ஜெட் தயாரிப்பிலும் இருந்தனர்.
இதே காரணத்தால் இவர்கள் மீது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்த உதாரணங்களும் உள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், ஆர்.பி.சி., வெற்றி பெற்றது தொடர்பாக, நடந்த வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் இறந்த சம்பவத்தில், கோவிந்த ராஜு ராஜினாமா செய்ய நேரிட்டது.
தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, சிறுபான்மை தலைவர்கள் மீது, மாநில காங்., தலைவர் சிவகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறுபான்மை பிரிவை கலைத்து, புதிதாக அமைப்பதில் ஈடுபட்டுள்ளார்.
கடினமான சூழல் தற்போது அமைச்சர் ஜமீர் அகமது கானின் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது. தாவணகெரே இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காததை, காரணம் காட்டி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி, சிவகுமார் பிடிவாதம் பிடிக்கிறார்.
முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களை குறி வைப்பதன் மூலம், அவரது பலத்தை குறைக்க காங்கிரசில் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை இருந்தாலும், தன் ஆதரவாளர்களை சித்தராமையா கைவிட்டது இல்லை.
ஆனால் இப்போது தன் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதையும், பதவி பறிக்கப்படுவதையும் தடுக்க முடியாமல், அவர் இயலாமையில் கையை பிசைகிறார்.
பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு வெளியான பின், கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு தீவிரமடையலாம் என, கூறப்படுகிறது.
