ADDED : ஜூலை 29, 2026 02:46 AM

பெங்களூரு: ''சித்தராமையா இல்லாமல் கட்சி நடத்துவது கஷ்டமே,'' என, மாகடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் சில தொகுதிகளில், ம.ஜ.த.,விடம் கடுமையான போட்டி உள்ளது.எனவே, வேட்பாளர்களை நியமிக்கும் போது, அதிக கவனம் தேவைப்படும். இதைப்பற்றி, பா.ஜ., கவலைப்பட வேண்டிய தேவையில்லை. தேர்தல் பொறுப்புகளை, பா.ஜ.,வினர், ம.ஜ.த.,விடம் ஒப்படைத்து விட்டனர். குமாரசாமி மாநில அரசியலுக்கு திரும்புகிறார் என்பதற்கு, வரும் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அவரே செயல்படுவார் என்றே அர்த்தம். குமாரசாமி பல முறை இடைத்தேர்தலில் நின்று உள்ளார்.
எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் நிற்பதெல்லாம் குமாரசாமிக்கு சாதாரணமான விஷயம். பா.ஜ., - எம்.எல்.சி., ரவியால் சும்மா இருக்க முடியாது. அவர் ஒவ்வொரு மேடையிலும் முஸ்லிம்களை விமர்சிக்கிறார். பா.ஜ., மேலிட தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக நினைத்துக்கொண்டு அர்த்தமற்ற கருத்துகளை பேசுகிறார். சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் கிடையாது. அவர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பரவாயில்லை. கட்சிக்கு ஆதரவாக அவர் பரப்புரை செய்ய வேண்டும். அவர் இல்லையென்றால் கட்சி நடத்துவது கஷ்டமே.
இவ்வாறு அவர் பேசினார்.
