/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காவிரி ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போது துணி, பூஜை பொருட்கள் விட்டு செல்ல தடை
/
காவிரி ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போது துணி, பூஜை பொருட்கள் விட்டு செல்ல தடை
காவிரி ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போது துணி, பூஜை பொருட்கள் விட்டு செல்ல தடை
காவிரி ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போது துணி, பூஜை பொருட்கள் விட்டு செல்ல தடை
ADDED : பிப் 13, 2026 05:27 AM

மாண்டியா: ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போது, துணிகள், பூஜை பொருட்களை விட்டுச் செல்லக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா வழியாக ஓடும் காவிரி ஆற்றில் புனித நீராட, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர, அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் ஏராளமானோர் வருகின்றனர். அத்துடன், இறந்தவர்களின் அஸ்தியும் இங்கு கரைக்கப்படுகிறது.
இவ்வாறு ஆற்றில் அஸ்தியை கரைக்கும் போதும், தர்ப்பணம் செய்யும் போதும், பலர் தாங்கள் அணிந்திருந்த துணிகள், பூஜை பொருட்களை ஆற்றிலேயே வீசுகின்றனர். இதனால், கரை ஒதுங்கும் ஆடைகள், பூஜை பொருட்களால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், ஆறும் மாசடைகிறது.
இதை தடுக்கும் வகையில், கலெக்டர் அலுவலகம், ஸ்ரீரங்கபட்டணா நகராட்சி தலைமை அதிகாரிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
காவிரி ஆற்றில் அஸ்தியை மட்டுமே கரைக்க அனுமதிக்க வேண்டும். ஆடைகள், பூஜை பொருட்களை அப்படியே ஆற்றில் விட்டு செல்ல தடை விதிக்க வேண்டும். இப்பணியை முறையாக நடத்த, அர்ச்சகர்களுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அஸ்தி கரைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
ஆற்றின் புனிதத்தன்மை கெடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பாக உள்ளதா என்பதை, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பார்வையிட்டு, ஆற்றுப்படுகை மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றின் புனிதத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தனித்தனி வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, ஆற்றுப்படுகை மாசுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

