/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நான் பேசாமல் இருப்பதே மேல்! துணை முதல்வர் சிவகுமார் விரக்தி
/
நான் பேசாமல் இருப்பதே மேல்! துணை முதல்வர் சிவகுமார் விரக்தி
நான் பேசாமல் இருப்பதே மேல்! துணை முதல்வர் சிவகுமார் விரக்தி
நான் பேசாமல் இருப்பதே மேல்! துணை முதல்வர் சிவகுமார் விரக்தி
ADDED : ஆக 28, 2025 11:08 PM

பெங்களூரு: ''உண்மையை கூறினால், சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. நான் பேசுவதை விட, மவுனமாக இருப்பதே மேல்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
துணை முதல்வர் சிவகுமாரின் சமீபத்திய கருத்துகள், சர்ச்சைக்கு காரணமாகின்றன. தர்மஸ்தலாவில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பது தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், தர்மஸ்தலாவுக்கு களங்கத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக சிவகுமார் கூறினார்.
சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடி, காங்கிரசாரின் கோபத்துக்கு ஆளானார். இதனால், 'துணை முதல்வர் சிவகுமார், வெளியே புலி, கட்சியில் எலி' என, பா.ஜ.,வினர் விமர்சித்தனர்.
மற்றொரு பக்கம் ம.ஜ.த.,வினர், 'நாகவள்ளி' திரைப்படத்தில், நாகவள்ளி படிப்படியாக உருமாறுவார். ஆனால் சிவகுமார், நாகவள்ளியை விட அதிவேகமாக உருமாறுகிறார்' என, கேலி செய்தனர்.
இதைத் தொடர்ந்து, 'சாமுண்டீஸ்வரி கோவில் ஹிந்துக்களின் சொத்து அல்ல' என்றும் சிவகுமார் கருத்துத் தெரிவித்தார். இவரது பேச்சுக்கு அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, யதுவீர் அதிருப்தி தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும் தன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், சிவகுமார் மனம் வருந்தியுள்ளார்.
பெங்களூரில் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
சட்டசபை உட்பட எந்த இடத்தில் நான் பேசினாலும், சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அரசியல்வாதிகள், ஊடகத்தினர், அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, எம்.பி., யதுவீர் என, பலரும் என் பேச்சில் தவறு கண்டுபிடிக்கின்றனர்.
நான் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என, தோன்றுகிறது. ஊடகத்தினர் எந்த விஷயமாக இருந்தாலும், எங்கள் கட்சியின் மற்ற தலைவர்கள், செய்தி தொடர்பாளர் களிடம் கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.