ADDED : ஜூலை 02, 2026 11:10 PM

- நமது நிருபர் -:
இத்தாலியில் நடந்த உலக மகளிர் செஸ் போட்டியில், பெங்களூரு சிறுமி வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரதிதி போர்டோலோய், 13. இங்குள்ள, சிஷ்யா பி.இ.எம்.எல்., பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் கொண்ட பிரதிதி, மாநிலம், தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்தாண்டின் துவக்கத்தில் ஆமதாபாத்தில் நடந்த, 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம், உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கும் தகுதி பெற்றார்.
இதையடுத்து, இத்தாலியில் ஜூன் 15 முதல், 26ம் தேதி வரை நடந்த 14, 16, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான டபிள்யூ.எப்.எம்., எனும் பெண்கள் பிடே மாஸ்டர்ஸ் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பெங்களூரின் பிரதிதி இடம் பெற்றார்.
இந்தியாவில் இருந்து பிரதிதி உட்பட 13 வீராங்கனைகள் பங்கேற்றனர். 83 நாடுகளை சேர்ந்த 758 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பிரதிதி விளையாடிய ஒன்பது சுற்றுகளில், 7ல் வெற்றி பெற்றார்; நான்கு 'டிராவில்' முடிந்தது.
எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல், ஒன்பது புள்ளிகள் பெற்றார்.
இதன் மூலம், அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்தியா சார்பில் பங்கேற்ற 13 பேரில், பிரதிதி மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
