மஹாராஜா டிராபி டி-20 போட்டி டிராவிட் மகன் சமித் அசத்தல்
மஹாராஜா டிராபி டி-20 போட்டி டிராவிட் மகன் சமித் அசத்தல்
ADDED : ஜூலை 02, 2026 11:09 PM

- நமது நிருபர் -:
கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில், ஹூப்பள்ளி டைகர்ஸ் அணியை, கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர் அணி, 2 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும், மஹாராஜா டிராபி டி-20 போட்டி நடத்தப் படுகிறது.
இந்தாண்டு, கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், மைசூரு வாரியர்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு, ஷிவமொக்கா ஆகிய ஆறு அணிகள் விளையாடி வருகின்றன.
கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியில், இந்தியா கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இடம் பெற்றுள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று முன்தினம், பெங்களூரு - ஹூப்பள்ளி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களுக்கு, ஏழு விக்கெட் இழப்புக்கு, 203 ரன்கள் எடுத்தது.
இதில், டிராவிட் மகன் சமித் டிராவிட், 23 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் என, மொத்தம், 32 ரன்கள் எடுத்தார். ஹூப்பள்ளி டைகர்ஸ் அணியின் பவுலர்களின் பந்துகளை நான்கு புறமும் விளாசினர்.
அவர் விளையாடும் 'ஸ்டைல்' அவரின் தந்தையை ஞாபகப்படுத்தியது. 20 வயதே ஆன சமித்தின் விளையாட்டு, சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆல் ரவுண்டரான இவர், நான்கு ஓவர்களில், 40 ரன்களை கொடுத்திருந்தார். 20 ஓவரில் ஏழு விக்கெட்களை இழந்து, 203 ரன்களை, பெங்களூரு அணி பெற்றிருந்தது.
இரண்டாவதாக களம் இறங்கிய ஹூப்பள்ளி அணி, துவக்கத்திலேயே ஆட்டம் காண துவங்கியது. இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட் என, முதல் ஆறு ஓவர்களில், 36 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.
போட்டியின் இறுதியில், 20 ஓவரில் ஏழு விக்கெட்களை இழந்து, 201 ரன்கள் மட்டுமே எடுத்து, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
