ADDED : ஜூலை 02, 2026 11:08 PM

- நமது நிருபர் -
ஹாசனின் ஹலேபீடு டவுனில், கர்நாடக பொதுப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலாவதி, 45. ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும் உள்ளார். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும், அகில இந்திய குடிமை பணி விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயம், கைப்பந்து விளையாட்டு போட்டிகளில பங்கேற்று சாதித்து உள்ளார்.
இதுகுறித்து கலாவதி கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். உடற்கல்வி ஆசிரியை ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் முடியவில்லை. தற்போது ஆங்கில ஆசிரியையாக இருந்தாலும், விளையாட்டில் அதிக கவனம் செலுத்துகிறேன்.
கடந்த, 2008ம் ஆண்டில் இருந்த தேசிய அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இதுவரை, 12 வெண்கல பதக்கம், 8 வெள்ளி பதக்கம் வென்று உள்ளேன். தங்க பதக்கத்தை சீக்கிரம் வென்று விடுவேன்.
வாழ்க்கைக்கும், விளையாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மகேஷ், நாகராஜ் உதவியுடன் விளையாட்டு மீது ஆர்வம் காட்டும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கிறேன். யோகா பயிற்சியிலும் ஈடுபடுகிறேன்.
விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஒரு போதும் கைவிட மாட்டேன். என்னால் முடிந்த வரை ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்பேன். விளையாட்டு வீரர், வீராங்கனையர் மனது வைத்து விட்டால், எந்த போட்டியாக இருந்தாலும் வெற்றி பெற்று விடுவர். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட நபரான பரமேஸ்வர், விளையாட்டு துறைக்கு அமைச்சராக கிடைத்தது நல்ல விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
