/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பத்திரிகையாளருக்கு விதித்த சிறை தண்டனைக்கு தடை
/
பத்திரிகையாளருக்கு விதித்த சிறை தண்டனைக்கு தடை
ADDED : ஜன 20, 2026 06:31 AM
பெங்களூரு: போலீஸ் அதிகாரி மீது, லஞ்ச குற்றச்சாட்டை சுமத்திய பத்திரிகையாளர் குருராஜுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மைசூரின் கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில், 2004ல் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுரேஷ்பாபு. இவர் ஒற்றை இலக்கு லாட்டரி விளையாட ஒத்துழைப்பு அளித்து, லஞ்சம் வாங்குகிறார். சாமுண்டி மலை அருகில் வாகனங்களை நிறுத்த அனுமதியளித்து, பார்க்கிங் ஏஜென்ட்களிடமும் லஞ்சம் பெற்றுள்ளார் என, குற்றம்சாட்டி 2004 ஆகஸ்ட் 3ல், அன்றைய மாலை நாளிதழான 'ஹலோ மைசூரு' நிருபர் குருராஜ் செய்தி வெளியிட்டார்.
இச்செய்தியால், தன் கவுரவத்தை குலைத்ததாக கூறி, மைசூரின் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குருராஜ் மீது, இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், குருராஜ் குற்றமற்றவர் என, கூறி, 2013 செப்டம்பர் 30ல் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இன்ஸ்பெக்டர் மேல் முறையீடு செய்தார்.
வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், குருராஜுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் குருராஜ், மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், குருராஜுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த சிறை தண்டனைக்கு தடை விதித்து, நேற்று உத்தரவிட்டது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

