UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 08:44 PM

– நமது நிருபர் –
ஓய்வெடுக்க வேண்டிய வயதில், முதியவர் ஒருவர் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். கிராமத்தை துாய்மையாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுகிறார்; மற்றவருக்கு முன் உதாரணமாக வாழ்கிறார்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின் சி.கடதகட்டே கிராமத்தில் வசிப்பவர் ஜமால் சாப், 82. இந்த வயதிலும் எறும்பு போன்று சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். தினமும் மூன்று மணி நேரம், கிராமத்தை துாய்மை செய்யும் பணியில் ஈடுபடுகிறார். கிராமத்தில் எங்கு குப்பை கிடந்தாலும், ஜமால் சாப் அங்கு சென்று குப்பையை அள்ளி, சுத்தம் செய்வது வழக்கம்.
பணம் கேட்பது இல்லை
பொதுஇடங்கள் மட்டுமின்றி கோவில், மசூதி, பஸ் நிலையம், கிராம பஞ்சாயத்து வளாகம், அரசு பள்ளி, மாணவர் விடுதி உட்பட பல இடங்களுக்கு சென்று குப்பையை அப்புறப்படுத்தி சுத்தம் செய்கிறார்.
ஷிவமொக்கா – ஹொன்னாளி சாலை நெடுகிலும், இவர் தினமும் சுத்தம் செய்வதை காணலாம். இதற்காக அவர் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பது இல்லை. யாரிடமும் பணம் கேட்பது இல்லை. ஒரு கப் டீ கூட வாங்கி குடிக்காமல் தொண்டு செய்கிறார்.
கிராமத்தை சுத்தம் செய்வதுடன் ஜமால் சாபின் சமூக சேவை நிற்கவில்லை. ஏழைகளின் வீட்டில் திருமணம் நடந்தால், தன்னால் முடிந்த பண உதவியை செய்கிறார். கோவில், மசூதி கட்டவும் பண உதவி செய்கிறார். இவர், இந்த, 82 வயதிலும் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக உள்ளார். இதற்கு அவரது உடல் உழைப்பும், சுறுசுறுப்பும் காரணம்.
சிரித்த முகம்
எவ்வளவு வேலைகள் செய்தாலும், முகத்தில் சோர்வு தென்படுவது இல்லை. அனைவருடனும் சிரித்த முகத்துடன் பேசுகிறார். கிராம பஞ்சாயத்து செய்ய வேண்டிய வேலையை இவரே செய்கிறார். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் காலமானார். இவரது பிள்ளைகளுக்கு திருமணம் செய்துள்ளார். அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும், செய்து கொடுத்துள்ளார்.
தற்போது சமூக சேவை செய்தபடி, மகனுடன், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். இவர் மீது கிராமத்தினர், பஞ்சாயத்து அதிகாரிகள் அதிக மரியாதை வைத்துள்ளனர்.
ஜமால் சாப் கூறியதாவது:
கிராமத்து சாலைகள், சாக்கடைகளை சுத்தம் செய்வது என் அன்றாட வேலை. என் மனைவி காலமான பின், அவரை நினைவு கூறும் வகையில், தினமும் சில மணி நேரம், துப்புரவு பணிக்காக ஒதுக்குகிறேன். என்னிடம் உள்ள பணத்தை, முடிந்த வரை தானம் செய்கிறேன். தினமும் என் மனைவியின் கல்லறைக்கு சென்று, சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின், பணியை துவக்குவேன்.
என்னை பொறுத்தவரை, கோவில், மசூதி அனைத்தும் ஒன்று தான். கோவில்களுக்கும் சென்று நான் சுத்தம் செய்கிறேன். எனக்கு பாகுபாடு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமத்தினர் கூறியதாவது:
ஜமால் சாப், எங்கள் ஊருக்கே பெருமை. தன் மனைவி இறந்த பின், அவரது நினைவாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளார். வீடுகளின் முன் வளர்ந்துள்ள, தேவையற்ற செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்துவது, சாக்கடையை சுத்தம் செய்கிறார். எங்கள் வீட்டு முன்பாகவும் செடி, கொடிகளை வெட்டினார். பிரதிபலனாக எதையும் பெறுவதில்லை.
இவரை போல யாராலும் இருக்க முடியாது. ஊருக்கு முன் மாதிரியாக வாழ்கிறார். எங்கள் ஊர் சுத்தமாக இருப்பதற்கு, இவரே முக்கியமான காரணம். கிராம பஞ்சாயத்து செய்ய வேண்டிய வேலையை, இவர் தானாக முன் வந்து செய்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
