மெஹந்தி கோன்களை சுருட்டி சாதனை படைத்த ஷிவானி பிரசாத்
மெஹந்தி கோன்களை சுருட்டி சாதனை படைத்த ஷிவானி பிரசாத்
UPDATED : அக் 25, 2026 12:00 AM
ADDED : அக் 24, 2026 08:44 PM

– நமது நிருபர் –
இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏதாவது ஒன்றில் சாதித்து பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இதற்காக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர். இவர்களில் ஒருவர் தான், மங்களூரை சேர்ந்த ஷிவானி பிரசாத், 25.
சுப நிகழ்ச்சிகளின் போது, பெண்கள் கையில் மெஹந்தி போடும் வேலை செய்கிறார். இவர், தனி ஒருவராக 2,000 மெஹந்தி கோன்களை சுருட்டி சாதனை படைத்து, ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில ் ’ இடம் பிடித்து உள்ளார்.
இதுகுறித்து, ஷிவானி பிரசாத் கூறியதாவது:
எனது 12வது வயதில் இருந்தே, மெஹந்தி மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. மெஹந்தி மூலம் கை, கால்களில் வைக்கப்படும் டிசைன்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. இதனால் மெஹந்தி போடும் கலையை கற்று கொண்டேன்.
சுப நிகழ்ச்சிகளின் போது, பெண்கள் கைகளில் மெஹந்தி போடுகிறேன்.
நான் அதிகம் நேசிக்கும் மெஹந்தி மூலம் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். காலி பிளாஸ்டிக் கோன்களை சுருட்டலாம் என்று தோன்றியது.
கடந்த செப்டம்பர் மாதம், தனி நபராக அமர்ந்து, கோன்களை சுருட்ட ஆரம்பித்தேன். தொடர்ந்து, 19 மணி நேரம் 29 நிமிடங்களில் 2,000 மெஹந்தி கோன்களை சுருட்டினேன். அதற்குள் மெஹந்தி வைக்கவில்லை.
பிளாஸ்டிக் தாள்கள் பிரிந்து விட கூடாது என்பதற்காக செல்லோ டேப் மட்டும் பயன்படுத்தினேன். இதை என் குடும்பத்தினர், நண்பர்கள் வீடியோவாக எடுத்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பினர்.
அவர்கள் என் திறமையை அங்கீகரிக்கும் வகையில், என் பெயரை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் சேர்த்து, எனக்கு விருது, பதக்கம் வழங்கினர்.
இந்த சாதனையை படைக்க நான் எந்த பயிற்சி எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
