/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு சமரசம் மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம் பொறுப்பு
/
ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு சமரசம் மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம் பொறுப்பு
ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு சமரசம் மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம் பொறுப்பு
ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு சமரசம் மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம் பொறுப்பு
ADDED : ஜூலை 12, 2025 10:57 PM

பல்லாரி: கல்யாண கர்நாடகா பகுதியில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு இடையில் சமரசம் ஏற்படுத்த, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளது.
பல்லாரி அரசியலில் 'இரட்டை காளைகள்' என்று பெயர் எடுத்தவர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு. முன்னாள் அமைச்சர்களான இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தனர்.
கனிம சுரங்க வழக்கில் ஜனார்த்தன ரெட்டி சிக்கிய பின், இருவருக்கும் இடையிலான நட்பில் விரிசல் விழுந்தது.
கடந்த ஆண்டு பல்லாரியின் சண்டூரில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., தோற்றதற்கு ஸ்ரீராமுலு தான் காரணம் என்று, ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் வைத்து கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் கூறினார்.
காங்., வெற்றி
ஜனார்த்தன ரெட்டியின் பேச்சை கேட்டு கொண்டு, தன் மீது மேலிட பொறுப்பாளர் அவதுாறு பரப்புவதாக, ஸ்ரீராமுலு பொங்கி எழுந்தார்; கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் கூறினார். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா சமாதானம் செய்தார்.
பல்லாரி மாவட்டம் பா.ஜ., கோட்டையாக இருந்தது. கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது பா.ஜ., மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோமண்ணா
இதுதவிர ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு செல்வாக்கு செலுத்திய, கல்யாண கர்நாடகா பகுதிகளான ராய்ச்சூர், விஜயநகரா, பல்லாரி, கொப்பாலில் பா.ஜ.,வுக்கு இப்போது கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கல்யாண கர்நாடகா பகுதியில் மீண்டும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், ஜனார்த்தன ரெட்டி - ஸ்ரீராமுலு இடையில் சமரசம் ஏற்படுத்த, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளது.
இருவருக்கும் இடையில் சமாதானம் செய்யும் பொறுப்பை ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் பல்லாரி சென்ற அவர், ஸ்ரீராமுலுவை சந்தித்து பேசினார்.
ஜனார்த்தன ரெட்டியை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் பல்லாரியில் இல்லை. அவரிடம் மொபைல் போனில் பேசிய சோமண்ணா, 'டில்லிக்கு வந்து என்னை சந்தியுங்கள்' என்று கூறிவிட்டு சென்று உள்ளார். ஸ்ரீராமுலுவையும் டில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்து உள்ளார். டில்லியில் வைத்து இருவருக்கும் இடையில், சமரச பேச்சு நடக்க உள்ளது.