ஸ்ரீராமுலுவை தாக்க முயற்சி ஜனார்த்தன ரெட்டி 'பகீர்'
ஸ்ரீராமுலுவை தாக்க முயற்சி ஜனார்த்தன ரெட்டி 'பகீர்'
ADDED : ஜன 12, 2026 06:51 AM

பல்லாரி: ''பல்லாரியின் கலவரத்தின் போது, எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் உதவியாளரும், அவரது கூட்டாளிகளும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியது மட்டுமின்றி, ஸ்ரீராமுலுவை தாக்கவும் முயற்சித்தது, வீடியோக்கள் மூலம் நிரூபணமாகி உள்ளன,'' என எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பேனர் விஷயத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் உதவியாளர் சதீஷ் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும், ஸ்ரீராமுலுவுக்கு எதிராக ஜாதி அடிப்படையில், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர்; அவரை அடிக்கும்படி கூறினர்.
கலவரத்துக்கு முன், ஸ்ரீராமுலு, சதீஷ் ரெட்டியிடம் தேவையற்ற கலவரங்களை ஏற்படுத்த வேண்டாம். இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இருப்பினும், ஸ்ரீராமுலுவை தாக்க முயற்சிக்கும் வீடியோக்கள் ஆதாரமாக உள்ளன. ஆனாலும், அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இவ்வழக்கை, சி.ஐ.டி.,யிடம் அரசு ஒப்படைத்தது வெட்கக்கேடானது. அவர்கள், நேர்மையான அதிகாரிகளாக இருந்திருந்தால், இந்நேரம் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்திருப்பர். சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னரும் கூட, யாரும் கைது செய்யப்படவில்லை. சி.ஐ.டி.,க்கும் போலீசாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைத்தால் மட்டுமே நீதி கிடைக்கும் அல்லது நீதிமன்ற நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். முன்னர், எங்களுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டு, சி.பி.ஐ., விசாரணை கோரியதை மறந்துவிடக்கூடாது.
இச்சம்பவத்தை கண்டித்து வரும் 17 ம் தேதி பல்லாரி நகரில் போராட்டம் நடத்துவோம். பாதயாத்திரை நடத்துவது குறித்து நாளை (இன்று) முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
